புலமைப்பரிசில் வினாத்தாள் தொடர்பில் எழுந்துள்ள புதிய சர்ச்சை: பொலிஸார் முன்வைத்துள்ள கோரிக்கை
2024ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு முன்னர் கசிந்ததாக கூறப்படும் மூன்று கேள்விகளைத் தவிர, வேறு கேள்விகளும் கசிந்ததாகக் கூறப்படுவது தொடர்பில், ஆதாரம் உள்ளவர்கள், 2024ஆம் ஆண்டு ஒக்டோபர் 7ஆம் திகதிக்குள் முறைப்பாடுகளை முன்வைக்குமாறு இலங்கை பொலிஸார் கோரியுள்ளனர்.
நாடளாவிய ரீதியில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்களின் காரியாலயங்களில் குறித்த முறைப்பாடுகளை சமர்ப்பிக்க முடியும் என பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அலுவலகங்களுக்குச் செல்ல முடியாதவர்கள் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகளை பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உரிய ஆதாரங்கள்
முறைப்பாட்டாளர்கள், தமது ஆதாரமாக ஆவணங்கள் அல்லது பிற கருவிகள் உட்பட எந்த வடிவத்திலும் சாட்சியங்களை வழங்கலாம். இந்தநிலையில் அனைத்து முறைப்பாடுகளும் முழுமையாக விசாரிக்கப்படும் என்று பொலிஸார் உறுதியளித்துள்ளனர்.
எந்தவொரு பொருத்தமான தகவலையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதற்கு பொதுமக்கள் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என்றும் பொலிஸார் கோரியுள்ளனர்.
ஏற்கனவே, செப்டெம்பர் 20ஆம் திகதியன்று பரீட்சையின் வினாத்தாள் கசிந்ததாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, விசாரணை ஆரம்பிக்கப்பட்டு, முதற்கட்ட விசாரணை அறிக்கை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
முழுமையான விசாரணை
எனினும், வினாத்தாளின் மூன்று கேள்விகள் அல்ல, எட்டு கேள்விகள் கசிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமையை அடுத்தே தற்போது புதிய பிரச்சினை எழுந்துள்ளது.
இதனையடுத்து, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்துவதா இல்லையா என்பது குறித்தும் விசாரணைகள் முழுமையாக முடிந்த பின்னரே தீர்மானிக்கப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு செப்டெம்பர் 15ஆம் திகதியன்று நடைபெற்ற ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை நாடளாவிய ரீதியில் 2,849 நிலையங்களில் இடம்பெற்றதுடன், அதில் 323,879 பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு தோற்றினர்.