அம்பாறையில் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை! தந்தை உட்பட ஏழு பேர் கைது
தனது 13 வயது மகளை தவறான தொழிலில் ஈடுபடத் தூண்டிய ஒருவரையும், அச்சிறுமியை தவறான முறைக்கு உட்படுத்திய ஏழு நபர்களையும் அம்பாறை, நிந்தவூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸார் விசாரணை
கொழும்பு பெண்கள் மற்றும் சிறுவர் பணியகத்திடம் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், அம்பாறைப் பிரிவு பெண்கள் மற்றும் சிறுவர் பணியகமும் நிந்தவூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் வாக்குமூலத்தின்படி, அவர் பன்னிரண்டு நபர்களால் தவறான முறைக்கு உட்படுத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.
அத்துடன் தனது தந்தையின் தூண்டுதலின் பேரில் ஐந்து மாதங்களுக்கும் மேலாக தவறான தொழிலில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக, நிந்தவூர் காவல் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் அம்பாறைப் பிரிவு பெண்கள் மற்றும் சிறுவர் பணியகத்தின் பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் தயானி கமகே ஆகியோர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் இபுனு அஷார் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆகியோரின் பணிப்புரையின் பேரில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.