அமெரிக்காவால் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாரிய கப்பல்.. நாடு திரும்பிய ஈரானிய மாலுமிகள்!
அமெரிக்காவினால் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஈரான் நாட்டு சரக்குக் கப்பலில் இருந்த ஆறு மாலுமிகள் தாயகம் திரும்பியுள்ளனர்.
ஓமான் வளைகுடா பகுதியில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 'தூஸ்கா' (Touska) என்ற கப்பலில் இருந்தவர்களே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளதாக ஈரானின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனினும், அதே கப்பலில் இன்னும் 22 ஈரான் மாலுமிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை விடுவிப்பதற்கான முயற்சிகளில் ஈரான் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், கடந்த ஏப்ரல் 20ஆம் திகதி முற்றுகை விதிகளை மீறியதாகக் கூறி அமெரிக்க கடற்படை இந்த கப்பலைக் கைப்பற்றியது.
தொடரும் போர்பதற்றம்..
பெப்ரவரி 28ஆம் திகதி முதல் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரான் மீது தாக்குதல்களைத் தொடங்கியதைத் தொடர்ந்து, பதிலடியாக ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மூடியதுடன் அமெரிக்க நட்பு நாடுகள் மீது தாக்குதல்களை முன்னெடுத்தது.

இதனால் அப்பிராந்தியத்தில் போர் சூழல் தீவிரமடைந்தது. பாகிஸ்தானின் சமரச முயற்சியால் ஏப்ரல் 8ஆம் திகதி போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டு, இஸ்லாமாபாத்தில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.
எனினும், அதில் இறுதி உடன்பாடு எட்டப்படவில்லை. பாகிஸ்தானின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த தற்காலிகப் போர்நிறுத்தம் நீடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், ஏப்ரல் 13ஆம் திகதி முதல் ஈரான் மீது அமெரிக்கா கடற்படை முற்றுகையைத் தீவிரமாக நடைமுறைப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.