காலநிலை மாற்றத்தால் 37 குளங்களின் வான்கதவுகள் திறப்பு
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற நிலை காரணமாக 73 பிரதான குளங்களில் 37 குளங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்தும் பெய்த மழை காரணமாக ஆறுகளின் நீர்மட்டம் 77 சதவீதமாக அதிகரித்துள்ளமையினாலே குறித்த தீர்மானம் முன்னெடுக்கபட்டுள்னது.
இதனடிப்படையில், ஆறுகளை அண்மையில் வசிக்கும் மக்களுக்கு அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
திறக்கப்பட்ட வான்கதவுகள்
மேலும் சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் 20 மாவட்டங்களில் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தகவல் வெளியிட்டுள்ளது.
தெதுறு ஓயா நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் நிக்கவரட்டிய, சிலாபம், ஆராச்சிகட்டுவ, பிங்கிரிய, வாரியாபொல, கொபெய்கனே உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெள்ளம் குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தொடர்ந்தும், அந்த மாவட்டங்களின் 166 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 80,642 குடும்பங்கள் தற்போது பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்கள்
மொத்தமாக 276,550 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 5,305 குடும்பங்களைச் சேர்ந்த 16,553 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகளில் கடற்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
அத்துடன், அருகம்பை பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகளுக்கும் நிவாரணம் வழங்குவதற்கு கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |