சி.ஐ.டி. எனக் கூறிப் பல இடங்களில் கைவரிசை காட்டிய 3 இளைஞர்கள் கைது!

Vavuniya Sri Lanka Sri Lanka Police Investigation
By Fathima Dec 30, 2023 12:07 PM GMT
Fathima

Fathima

சி.ஐ.டி. எனக் கூறி வவுனியா மற்றும் கிளிநொச்சி ஆகிய இடங்களில் திருட்டில் ஈடுபட்ட மூவர் வவுனியா குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றத் தடுப்புப் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமையவே அவர்கள் இன்று(30.12.2023) கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா - தாண்டிக்குளம் பகுதியில் உள்ள பேருந்து தரிப்பிடப் பகுதியில் நேற்று(29) நின்ற மூன்று இளைஞர்கள் அந்த வீதியால் மோட்டர் சைக்கிளில் வந்த இளைஞர் ஒருவரை மறித்து தாம் சி.ஐ.டி. எனக் கூறி, தம்மைத் தாண்டிக்குளம் குளக்கட்டுப் பகுதியில் இறக்கிவிடுமாறு கூறியுள்ளனர்.

பொலிஸ் விசாரணை

இதனை நம்பிய அந்த இளைஞர் அவர்களை ஏற்றிக்கொண்டு தாண்டிக்குளம் குளக்கட்டுப் பகுதியால் சென்றபோது மேற்படி இளைஞரிடம் இருந்த கைத்தொலைபேசியைப் பறித்துக்கொண்டு மூன்று இளைஞர்களும் தப்பிச் சென்றுள்ளனர்.

சி.ஐ.டி. எனக் கூறிப் பல இடங்களில் கைவரிசை காட்டிய 3 இளைஞர்கள் கைது! | 3 Persons Said Cid Cheated And Robbed Vavuniya

இதையடுத்து, அந்த மூவரும் மடுகந்த பகுதிக்குச் சென்று அங்கு வீதியால் சென்ற பெண் ஒருவரின் சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த இரு சம்பவங்கள் தொடர்பிலும் வவுனியா பொலிஸ் நிலையக் குற்றத் தடுப்புப் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வவுனியா தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வழிகாட்டலில் குற்றத் தடுப்புப் பிரிவு பொறுப்பாதிகாரி ஜெயதிலகவின் தலைமையில் பொலிஸ் சார்ஜன்டுகளான திஸாநாயக்க, ஜெயதுங்க, உபாலி மற்றும் சியான் உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் விரைந்து விசாரணைகளை ஆரம்பித்தனர்.

மீட்கப்பட்ட பொருட்கள்

இதன்போது குறித்த மூன்று இளைஞர்களும் கைது செய்யப்பட்டதுடன், அவர்களிடம் இருந்து திருடப்பட்ட சங்கிலி மற்றும் கைத்தொலைபேசி என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.

சி.ஐ.டி. எனக் கூறிப் பல இடங்களில் கைவரிசை காட்டிய 3 இளைஞர்கள் கைது! | 3 Persons Said Cid Cheated And Robbed Vavuniya

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையின்போது வவுனியாவில் திருடப்பட்ட 2 மோட்டர் சைக்கிள்கள் மீட்கப்பட்டதுடன், கிளிநொச்சியில் திருடப்பட்ட மோட்டர் சைக்கிள் ஒன்றும், லப்டொப் ஒன்றும், கைத்தொலைபேசி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம் தொடர்பில் மகாறம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த 23 மற்றும் 28 வயதுடைய இரண்டு இளைஞர்களும், கிளிநொச்சியைச் சேர்ந்த 29 வயது இளைஞர் ஒருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சியில் திருடப்பட்ட பொருள்கள் கிளிநொச்சி பொலிஸாரிடம் வவுனியா பொலிஸார் ஒப்படைத்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின் திருடப்பட்ட பொருள்களையும் கைதான மூவரையும் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.