பேராதனை பல்கலைக்கழகத்தில் கொடூரமாக தாக்கப்பட்ட இரு மாணவர்கள் : எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை
பேராதனை (Peradeniya) பல்கலைக்கழக முதலாம் வருட மாணவர்கள் இருவர் கொடூரமாக தாக்கப்பட்டுள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதலுக்கு உள்ளான மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், நான்கு சிரேஷ்ட மாணவர்களின் கல்வியை இடைநிறுத்துவதற்கு பல்கலைக்கழகத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 12ஆம் திகதி இரவு முதலாம் வருட மாணவர்கள் இருவரும் தங்கியிருந்த விடுதிக்குள் நுழைந்து குறித்த தாக்குதல் சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தாக்குதல் சம்பவம்
இதன்போது, காயமடைந்த இரண்டு மாணவர்களும் பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து, ஆபத்தான நிலையில் இருந்த மாணவர் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி (Kandy) தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து, குறித்த மாணவர்கள் வழங்கிய தகவல்களுக்கமைய, தாக்குதலுக்கு உள்ளான நான்கு மாணவர்களும் விஞ்ஞான பீடத்தின் மூன்றாம் மற்றும் நான்காம் வருடங்களில் கல்வி கற்று வருவதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த நான்கு மாணவர்களுக்கும் எதிராக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் ஒழுக்காற்றுப் பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கல்விப் பத்திரம்
அத்துடன், ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட்டு இது தொடர்பில் முடிவெடுக்கும் வரையில் அவர்களது மாணவர் கல்விப் பத்திரம் இரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும், தாக்குதலுக்கு உள்ளாகி கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் மாணவரின் காது ஒன்று பலத்த சேதம் அடைந்துள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் பேராதனை பொலிஸார் விசேட விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |