13ஐ நடைமுறைப்படுத்துவது தொடர்பில் வட்டமேசை மாநாட்டைக் கூட்டுக : முன்னாள் சபாநாயகர் கோரிக்கை

13th amendment Sri Lankan Tamils Karu Jayasuriya Ranil Wickremesinghe Sri Lankan political crisis
By Madheeha_Naz Jun 12, 2024 05:30 PM GMT
Madheeha_Naz

Madheeha_Naz

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது  குறித்து அரசியல் தலைவர்களும், புலம்பெயர் தமிழர்களும் நேர்மறையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள நிலையில் தாமதமின்றி வட்டமேசை மாநாட்டைக் கூட்டி தீர்வை எட்டுமாறு சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய(Karu Jayasuriya)  கோரிக்கை விடுத்துள்ளார்.

 எமக்குள்ள பாரிய கடமை

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில்,

"வடக்கு மற்றும் தெற்கின் பரஸ்பர நம்பிக்கையை ஏற்படுத்தவும், இனம் மற்றும் மதத்தை அடிப்படையாகக் கொண்ட மோதல்கள் மீண்டும் இடம்பெறாமல் இருப்பதற்கும், அனைத்து பிரஜைகளுக்கும் கண்ணியத்துடன் வாழக்கூடிய உரிமையை வழங்குவதும், இந்தப் பிரச்சினைகளை எதிர்கால தலைமுறைகளுக்கு விட்டு வைக்காமல் இருப்பதும் எமக்குள்ள பாரிய கடமையாகும்.

13th amendment

ஆகையால் இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்தி அதற்கான தலையீடுகளை எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் மேற்கொள்ள வேண்டும் என்பது எமது நம்பிக்கையாகும்.

மேலும் 9 ஆவது நாடாளுமன்றத்தின் கால எல்லை தொடர்பிலும் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி உள்ளிட்ட ஆளும் கட்சிக்கும், ஒட்டுமொத்த எதிர்க்கட்சிக்கும் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

13ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதின் முக்கியத்துவம் தொடர்பில் அண்மையில் எதிர்க்கட்சித் தலைவர் பகிரங்கமாக கருத்து தெரிவித்துள்ளதுடன், இவ்விடயம் தொடர்பில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும், மக்கள் விடுதலை முன்னணி மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா பண்டாரநாயக்க, மகிந்த ராஜபக்ச ஆகியோரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தற்போது நாடாளுமன்றத்தில் சுயேட்சையாக செயற்பட்டு வரும் அதிக அளவிலான உறுப்பினர்களும் எதிர்காலத்தில் தேர்தலில் போட்டியிட எண்ணி இருக்கும் ஜனாதிபதி வேட்பாளர்களும் இந்தக் கருத்தில் உறுதியாக இருப்பது எமக்குத் தெரியும்.

13th amendment

இது போன்ற முற்போக்கான அபிலாஷைகளைப் பாராட்டபட வேண்டும். இந்த அனைத்து விடயங்களையும் கருத்தில் கொள்கையில் தற்போது நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து தாமதமின்றி வட்டமேசை மாநாட்டைக் கூட்டி இவ்விடயங்களை தெளிவுபடுத்திக் கொள்ளுமாறு மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகின்றோம்.

தமிழ் புலம்பெயர்ந்த தரப்பினரில் குறிப்பிடத்தக்க குழுவினர் இதற்கு ஆதரவு தெரிவித்து இருப்பதும் பாராட்டப்பட வேண்டிய விடயமாகும்.

இவ்விடயத்துக்கு நாட்டின் முதன்மை தரப்புகள் ஆதரவு தெரிவித்திருப்பது பாராட்டத்தக்கது. இந்தப் பேச்சுகளைப் புறக்கணிக்காமல் இருப்பதற்கான கடமை தமிழ் அரசியல் கட்சிகளுக்கு போன்றே அனைத்து கட்சிகளுக்கும் உள்ளது.

குறுகிய அரசியல் காரணங்களுக்காக இந்தச் சந்தர்ப்பத்தை நழுவ விட்டால் துரோகிகள் என்று எதிர்காலச் சந்ததியினர் குற்றஞ்சாட்ட வழிவகுக்கும். ஆகையால் ஜனாதிபதி உள்ளிட நாடாளுமன்றம் உன்னத நோக்கத்துடன் தலையிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.