சுகாதார அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை

Rakshana MA
இலங்கையில் தற்போது பல்வேறு இடங்களிலும் பெய்து வரும் மழை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் எனச் சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது.
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 10 ஆயிரத்து 886 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
நிலவும் மழையுடனான காலநிலையைக் கருத்திற்கொண்டு தேசிய டெங்கு நோய் தடுப்பு பிரிவு நாளை மறுதினம் (27) முதல் இருநாள் டெங்கு நோய் ஒழிப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளது.
விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கொழும்பு மாநகர எல்லைப்பகுதி, கம்பஹா, களுத்துறை, மாத்தளை, மட்டக்களப்பு, திருகோணமலை, இரத்தினபுரி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களை மையப்படுத்தி இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
குறித்த மாவட்டங்களில் அச்சுறுத்தல் நிலவும் 37 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
கடும் காய்ச்சலுடனான தலைவலி, குமட்டல், வாந்தி, தோளில் சிவப்பு புள்ளிகள், இரத்தபோக்கு, தசை மற்றும் மூட்டு வலி போன்ற நோய் அறிகுறிகள் இருப்பின் உடனடியாக வைத்தியசாலைக்கோ அல்லது தகுதி வாய்ந்த வைத்தியரிடமோ சென்று உரிய சிகிச்சையை பெற்றுக் கொள்ளுமாறு தேசிய டெங்கு நோய் தடுப்பு பிரிவு பொதுமக்களைக் கோரியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |