இந்த அரசாங்கத்திடம் எந்தத் தெளிவான திட்டமும் இல்லை - கடுமையாக விமர்சித்த விமல் வீரவன்ச
தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகள் காரணமாக, நாட்டின் அரச ஊழியர்கள் மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.இது தொடர்பில் அவர் மேலும் பேசுகையில், "கடந்த காலங்களில் அரச ஊழியர்களுக்கு தவணை முறையில் வாகனங்களை வாங்கும் வசதி ஏற்படுத்தித் தரப்படும் என்று பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்டன.

அரசாங்கத்திடம் திட்டமில்லை
ஒரு காலத்தில் ரூ.12 இலட்சத்திற்கு விட்ஸ் (Vitz) கார் வாங்குவது குறித்து பேசப்பட்ட நிலையில், இன்று 20 கிலோ அரிசியைக் கூட தவணை முறையில் கடனுக்கு வாங்கும் நிலைக்கு அரச ஊழியர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
அஞ்சல் மூல வாக்களிப்பில் நீண்ட வரிசையில் நின்று தற்போதைய ஆட்சியாளர்களுக்கு ஆதரவு வழங்கிய அரச ஊழியர்களையே, இன்று அமைச்சர்கள் பகிரங்கமாக 'திருடர்கள்' என்று அவமதிக்கின்றனர்.
வரலாற்றில் எந்த அரசாங்கமும் அரச ஊழியர்களை இந்த அளவுக்கு அவமதித்ததில்லை. நாட்டை முன்னேற்றுவதற்கோ அல்லது மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கோ அரசாங்கத்திடம் எந்தத் தெளிவான திட்டமும் இல்லை.
அதற்கு பதிலாக, அரசியல் பழிவாங்கல்களும் சில அதிகாரிகளின் விருப்பங்களைப் பாதுகாப்பதுமே அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாக மாறியுள்ளது.
விவசாயிகளை அவமதிப்பதும், பொய்க் குற்றச்சாட்டுகளை முன்வைத்து அரசியல் எதிரிகளை குறிவைப்பதும் தற்போதைய ஆட்சியின் நாளாந்த நடவடிக்கையாக உள்ளது" என தெரிவித்துள்ளார்.