இலங்கையின் இறக்குமதி பொருட்களுக்கு 12.5 வீதம் கூடுதல் வரி: அமெரிக்காவின் அதிரடி அறிவிப்பு

Sri Lanka United States of America World
By Shalini Balachandran Jun 03, 2026 11:40 AM GMT

இலங்கை உட்பட 60 நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 வீதம் முதல் 12.5 வீதம் வரை கூடுதல் இறக்குமதி வரி விதிப்பதற்கு அமெரிக்க நிர்வாகம் பரிந்துரை செய்துள்ளது.

கட்டாய உழைப்பை (Forced Labor) பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் இறக்குமதியைத் தடுப்பதற்கு அந்தந்த நாடுகள் போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் இதனால் அமெரிக்க வர்த்தக நடவடிக்கைகளுக்கு நியாயமற்ற பாதிப்புகள் ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டி இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனடிப்படையில் கனடா, மெக்சிகோ, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் மலேசியா உள்ளிட்ட சில நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 வீதம் கூடுதல் வரி விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இலங்கை உட்பட மேலும் 45 நாடுகளுக்கு 12.5 வீதம் கூடுதல் வரி விதிக்க முன்மொழியப்பட்டுள்ளது.

கட்டாய உழைப்பால் தயாரிக்கப்படும் பொருட்களின் இறக்குமதியைத் தடை செய்வதிலும் அது தொடர்பான சட்டங்களைத் திறம்பட நடைமுறைப்படுத்துவதிலும் இலங்கை போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பது விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் (USTR) தெரிவித்துள்ளது.

இருப்பினும் ஆடை மற்றும் ஜவுளி (Apparel and textiles) இறக்குமதிக்காகக் குறைந்த வரி விகிதங்களின் கீழ் குறிப்பிட்ட அளவிலான பொருட்களை அமெரிக்க சந்தைக்குள் அனுமதிக்க வழிவகுக்கும் ஒரு சிறப்பு வழிமுறை முன்மொழியப்பட்டுள்ளது.

இது குறித்த மேலதிக விபரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. இந்த முன்மொழிவுகள் தொடர்பான பொதுமக்களின் கருத்துக்கள் ஜூலை ஆறாம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.

இதையடுத்து ஜூலை ஏழாம் திகதி இது தொடர்பான பொது விசாரணை (Public hearing) நடத்தப்படவுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.