ஈரானின் முக்கிய தளங்களை குறிவைக்கும் அமெரிக்கா.. வெளியான திடுக்கிடும் செய்தி
ஹோர்முஸ் நீரிணை மற்றும் ஈரானிய இராணுவத் தலைவர்களைக் குறிவைத்து அமெரிக்கா புதிய தாக்குதல் திட்டங்களை வகுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஹோர்முஸ் நீரிணை யில் ஈரானின் திறன்களைக் குறிவைத்து அமெரிக்க இராணுவம் புதிய போர் திட்டங்களை வகுத்து வருவதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒரு திட்டத்தை ஈரான் வகுக்க மேலும் அவகாசம் தேவை என்று பாகிஸ்தானிய மத்தியஸ்தர்கள் கூறினர்.
ஈரானிய இலக்குகள்..
அவர்களின் வேண்டுகோளின் பேரில், ஈரானுடனான போர் நிறுத்தத்தை நீட்டித்ததாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த சில நாட்களுக்குப் பிறகு இந்த தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த செய்திகளின்படி, பென்டகன் பல தாக்குதல் திட்டங்களை மதிப்பாய்வு செய்து வருகிறது. ஹோர்முஸ் நீரிணை, தெற்கு அரேபிய வளைகுடா மற்றும் ஓமான் வளைகுடாவைச் சுற்றியுள்ள ஈரானிய இலக்குகள் மீதான தாக்குதல்களை உள்ளடக்கிய ஒரு திட்டமும் இதில் அடங்கலாம்.
ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் தனது ஆதிக்கத்தைத் தக்கவைத்துக் கொள்ள உதவிய சொத்துக்களான, இஸ்லாமியப் புரட்சிகரக் காவலர் படையின் அதிவேகத் தாக்குதல் படகுகள் மற்றும் கண்ணிவெடிகளைப் பதிக்கப் பயன்படுத்தப்படும் கப்பல்கள் உள்ளிட்டவற்றை இந்த திட்டம் குறிவைக்கும் என்று அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.