கிழக்கில் சத்துருக்கொண்டான் படுகொலையை சர்வதேச விசாரணை செய்ய கோரிக்கை
கிழக்கில் ஊர்காவல் படையினராலும், இராணுவத்தினராலும் நடத்தப்பட்ட மிகப்பெரும் படுகொலையான சத்துருக்கொண்டான் படுகொலை தொடர்பில் சர்வதேச ரீதியான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கையை சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு தலைவர் வைரமுத்து குழந்தைவடிவேல் கோரிக்கை விடுத்துள்ளார்.
மட்டு. ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
சத்துருக்கொண்டான் படுகொலை
இதன்போது அவர் மேலும் கூறுகையில், குறித்த படுகொலை நடைபெற்ற இராணுவமுகாமில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 1990.09.09 அன்று சத்துருக்கொண்டான் பனிச்சையடி கொக்குவில் பிள்ளையாரடி ஆகிய கிராமங்களில் 184 பேர் படுகொலை செய்யப்பட்டு இருக்கின்றனர்.
இலங்கை இராணுவத்தினராலும், முஸ்லிம் ஊர்காவல் படையினராலும் இந்த படுகொலை செய்யப்பட்டது. இந்த படுகொலைக்கு நேரடியாக சாட்சியங்களும் இருக்கின்றது.
இந்த படுகொலையில் நேரடியாக பாதிக்கப்பட்டவன் என்ற சார்பில் இந்தப் படுகொலைக்கு விசாரணை வேண்டும் அத்தோடு புதிய அரசாங்கத்தில் படுகொலைகள் அனைத்தும் தோண்டப்பட்டு கொண்டிருக்கின்றது.
செம்மணி படுகொலை
உதாரணமாக செம்மணி படுகொலை தோண்டப்பட்டு இருக்கின்றது.
அதே நேரத்தில் கிழக்கு மாகாணத்தில் மிகக் கொடூரமாக நடந்த படுகொலை என்றால் சத்துருக்கொண்டான் படுகொலை. இந்த படுகொலைக்கான நீதி இதுவரைக்கும் கிடைக்கவும் இல்லை.
எனவே இந்த படுகொலையை உடனடியாக இந்த புதிய அரசாங்கம் சர்வதேச விசாரணைக்கு கொண்டு செல்ல வேண்டும்.
உள்நாட்டு விசாரணையில் எந்த நம்பிக்கையும் எங்களுக்கு இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |


