இலங்கைக்குக் கடத்தவிருந்த 3 கோடி ரூபாய் போதைப்பொருள் மீட்பு!
ராமநாதபுரம் அருகே இலங்கைக்குக் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 116 கிலோ கஞ்சா பொதிகள் சுங்கத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே தோப்பு வலசை கடற்கரைப் பகுதியில் நேற்று (20-01-2026) அதிகாலை இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இலங்கைக்கு அருகிலுள்ள ராமநாதபுரம் மாவட்ட கடல் வழியாகக் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் மற்றும் மஞ்சள் அதிகளவில் கடத்தப்பட்டு வருகின்றன.
சுங்கத்துறை அதிகாரிகள்
இதனைத் தடுக்கத் தமிழ்நாடு பாதுகாப்புப் பிரிவினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், திருப்புல்லாணி அருகே கடல் வழியாக இலங்கைக்குக் கஞ்சா கடத்தத் திட்டமிட்டுள்ளதாகச் சுங்கத்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, சுங்கத்துறை அதிகாரிகள் அப்பகுதியில் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது, நேற்று அதிகாலை தோப்பு வலசை கடற்கரைப் பகுதியில் வாகனம் ஒன்றில் வந்த சிலர் பொதிகளை இறக்கி வைத்துவிட்டுச் சென்றுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.
தீவிர விசாரணை
இதனைத் தொடர்ந்து, சுங்கத்துறை துணை இயக்குனர் பிரகாஷ் தலைமையிலான அதிகாரிகள் அங்குச் சென்று நடத்திய சோதனையில், ஆங்காங்கே பதுக்கி வைக்கப்பட்டிருந்த கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்தநிலையில், கைப்பற்றப்பட்ட 116 கிலோ கஞ்சா பொதிகளின் மதிப்பு இலங்கை பெறுமதியில் சுமார் 3 கோடி ரூபாய் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து கஞ்சா கடத்தல் முயற்சியில் ஈடுபட்டவர்களைக் கண்டறிய, அப்பகுதியிலுள்ள கண்காணிப்பு சிசிரிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு சுங்கத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.