மட்டக்களப்பில் சட்டவிரோ மின்சார வேலியில் சிக்கி இருவர் உயிரிழப்பு
மட்டக்களப்பு - குடும்பிமலை பிரதேசத்தில் பண்ணை ஒன்றில் சட்டவிரேதமாக அமைக்கப்பட்ட மின்சார வேலியில் மின்சாரம் தாக்கி இரு விவசாயிகள் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (13.02.2024) இடம்பெற்றுள்ளது.
இதன்போது குடும்பிமலையைச் சேர்ந்த 51 வயதுடைய ஆறுமுகம் லோகநாதன், பலிபாய்ந்த கல்லைச் சேர்ந்த 21 வயதுடைய விநாயகமூர்த்தி சுதர்சன் ஆகிய இருவருமே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
பொலிஸ் விசாரணை
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள குடும்பிமலை ஈச்சையடி பகுதியில் முன்னாள் பிரதி அமைச்சர் ஒருவருக்கு சொந்தமான பண்ணையை வாழைச்சேனையைச் சேர்ந்த நபர் ஒருவர் குத்தகைக்கு எடுத்து செய்துவரும் நிலையில் காட்டு விலங்குகள் உள்நுழைவதை தடுப்பதற்காக சட்டவிரோதமாக மின்சாரத்தை பெற்று பண்ணையை சுற்றி மின்சார வேலி அமைத்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த பண்ணைக்கு அருகில் வேளாண்மை அறுவடைக்கு சென்று மாமனாரும் மருமகனும் நேற்றைய தினம்(12) சென்றுள்ள நிலையில் சம்பவதினமான இன்று(13) காலை பண்ணைக்கு சென்ற உரிமையாளர் மின்சார வேலியில் மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்துள்ளதை கண்டு பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் நீதிமன்ற உத்தரவை பெற்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஒப்படைப்பதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்துவருவதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.