அம்பாறையில் இலட்சக்கணக்கான பெறுமதி மிக்க போதைப்பொருளுடன் இருவர் கைது
அம்பாறையில் பெருமளவு போதைப்பொருளுடன் இரு சந்தேகநபர்கள் கல்முனை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல்முனை மாநகரில் உள்ள உல்லாச விடுதி ஒன்றில் வைத்து நேற்று (16) மாலை இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
கல்முனை விசேட அதிரடிப்படையின் புலனாய்வு பிரிவின் தகவலுக்கமைய நீண்ட நாட்களாக ஐஸ் போதைப்பொருட்களை விநியோகம் செய்து வந்த சந்தேகநபர்களே கைதாகியுள்ளனர்.
சூட்சுமமாக கடத்தி வரப்பட்டுள்ள போதைப்பொருள்
கொழும்பு பகுதியில் இருந்து கல்முனைக்கு நீண்ட காலமாக குறித்த போதைப்பொருட்கள் கடத்தி வரப்பட்டுள்ளதுடன், 36 வயது மற்றும் 49 வயது மதிக்கத்தக்க கல்முனை மற்றும் அநுராதபுரம் பகுதியை சேர்ந்த சந்தேகநபர்கள் ஆடம்பர உல்லாச விடுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த போதைப்பொருட்கள் பொலித்தீன் பைகளில் உறையிடப்பட்டு மிக சூட்சுமமாக கடத்தி வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மற்றும் சான்றுப்பொருட்களை மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு கல்முனை விசேட அதிரடிப்படையினர் ஒப்படைக்கவுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |