அம்பாறையில் முஸ்லிம்களுக்கு நன்றி தெரிவித்த தமிழ் மக்கள் - திராய்க்கேணி படுகொலை
அம்பாறை (Ampara) மாவட்டத்தின் திராய்க்கேணி கிராமத்தில் 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6ஆம் திகதி நிகழ்ந்த கொடூரமான இனப்படுகொலைக்கு 35 வருடங்கள் பூர்த்தியான நிலையில், அதில் உயிரிழந்த 54 அப்பாவி தமிழர்கள் நினைவாக ஏற்பாடு செய்யப்பட்ட நினைவேந்தல் நிகழ்வில், நேரில் அந்த சம்பவங்களை பார்த்தவர்கள் இன்றும் கண்ணீர் சிந்தி தங்களது துயரங்களை பகிர்ந்துள்ளனர்.
திராய்க்கேணி எழுச்சி ஒன்றியம் ஏற்பாட்டில், சம்பவம் இடம்பெற்ற ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் முன்றலில் இந்த நிகழ்வு முன்னெடுக்கபட்டிருந்தது.
இதன்போது, சில முஸ்லிம் மக்கள் அப்படுகொலை இடம்பெறும் போது எம்மை காப்பாற்றினர். அதனை நாம் நன்றியுடன் நினைவு படுத்துகின்றோம் என தழிழ் மக்கள் சார்பில் சுட்டிக்காட்டப்பட்டது.
இனப்படுகொலை
1990ஆம் ஆண்டு திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட இந்த இனப்படுகொலை, இலங்கை இராணுவம் மற்றும் முஸ்லீம் ஊர்காவல்படை உறுப்பினர்கள் இணைந்து செயல்பட்டதாகக் கூறப்படுகிறது.
கிராம மக்கள் ஆலயத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் வெட்டப்பட்டும், சுடப்பட்டும், வீடுகளில் அடைத்து தீவைக்கப்பட்டும் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர்.
வன்முறை அன்றைய காலை முதல் பிற்பகல் வரை நீடித்தது. இந்த தாக்குதலில் 350க்கும் மேற்பட்ட வீடுகள் அழிக்கப்பட்டன. பல பெண்கள் விதவையாகவும், ஏராளமானோர் அங்கவீனர்களாகவும் மாறினர்.
அந்நாளில் தப்பியோர், காரைதீவில் அகதி முகாம்களில் நான்கு ஆண்டுகள் தங்கி, பின்னர் தங்களது சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். படுகொலைக்கு நீதி கோரியதற்காக, அக்கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் மயிலிப்போடி 1997ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார்.
அவரது கொலைக்குப் பின்னணியில், நில அபகரிப்பு மற்றும் கடந்த கால இனப்படுகொலை தொடர்பான வழக்குகளை தொடர்ந்து நீதிமன்றத்தில் தொடர்ந்து விசாரித்தது தான் காரணமென கூறப்படுகிறது.
இந்தக் கொடூரத்திற்குப் பின்னால் நில ஆக்கிரமிப்பு நோக்கங்கள் இருந்ததற்கான அடையாளங்கள் காலப்போக்கில் தெளிவாகி வருகின்றன.
நீங்காத ரணங்கள்
நிகழ்வின் போது உரையாற்றியவர்களில் சிலர், இந்த சம்பவம் போலவே செம்மணியில் மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டது போல், திராய்க்கேணியிலும் மனித எச்சங்கள் உள்ளதாக சந்தேகம் இருப்பதாகவும், அவை தோண்டப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
"எந்த மதமாக இருந்தாலும், ஆலயம் என்பது புனித இடம். ஆனால் இலங்கையில் அதுவே தமிழர்களுக்கான மரணவிதியானது" என்று ஒருவர் உருக்கமாக தெரிவித்திருந்தார்.
வீரமுனை, உடும்பங்குளம், காரைதீவு, மீனோடைக்கட்டு போன்ற பல இடங்களிலும் இதே மாதிரியான இனப்படுகொலைகள் இடம்பெற்றுள்ளன என்றும், இன்றுவரை எந்த ஒரு சம்பவத்திற்கும் நீதியோ, நட்டஈடோ வழங்கப்படவில்லை என்றும் அவர்களது மனவலி வெளிப்பட்டது.
இந்த 35வது நினைவேந்தல் நிகழ்வில், விசேட பூசைகள் நடத்தப்பட்டு, ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, மலர் அஞ்சலிகள் செலுத்தப்பட்டன.
நீதி இன்னும் கிடைக்கவில்லை என்றாலும், அந்த இனவழிப்பின் நினைவுகள் மக்கள் மனங்களில் அழிக்கமுடியாத பாதங்களை விட்டிருக்கின்றன என்பது நிதர்சனமான உண்மையே.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |














