உழைக்கும் மக்களே, நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதாரத்தை கட்டி எழுப்பும் சக்தி – ஜனாதிபதி

Sri Lanka
By Nafeel May 01, 2023 08:30 AM GMT
Nafeel

Nafeel

**இலங்கையிலுள்ள அனைத்து சமூகங்களுக்கும் நன்மை பயக்கும் கொள்கைகளுக்கு அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு இருப்பதாகவும் நாட்டின் நீண்டகாலமாக நீடிக்கும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு இந்த ஆண்டு உடன்பாடு எட்ட எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது தொழிலாளர் தின உரையின் போது தெரிவித்தார் – PMD **

தனது முயற்சி அரசியலன்றி நாட்டின் பொருளாதாரத்தை சரியாக நிர்வகித்து மக்கள் மீதான சுமையை குறைப்பதே என்றும் நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கான பலம் தனக்கு இருப்பதாகவும் அதற்காக ஒத்துழைக்கும் அமைச்சர்களுடன் இணைந்து செயற்பட முடியும் என்ற நம்பிக்கையினால் தான் ஜனாதிபதி பதவியை ஏற்றுக்கொண்டதாகவும் ஜனாதிபதி தனது மே தின உரையில் குறிப்பிட்டார் -PMD **

சுதந்திரம் அடைந்து நூற்றாண்டை அடையும் 2048 ஆகும் போது இந்தியா 2047 இலும் சீனா 2049 இலும் சாதிக்க எதிர்பார்ப்பது போன்று அபிவிருத்தியடைந்த பொருளாதாரம் கொண்ட நாடாக மாறுவதே இலங்கையின் இலக்காக இருக்க வேண்டும் எனவும் “2048 இலங்கைக்கு அபிவிருத்திக்கான ஆண்டாகும் என்பதோடு தற்போதைய சந்ததியினருக்காக மட்டுமல்லாது எதிர்கால இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்காகவும் தான் இந்த நாட்டை கட்டியெழுப்புகிறோம்.” -PMD

உழைக்கும் மக்களே, நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதார செயல்முறையிலும் வலுவான செல்வாக்கை செலுத்தக்கூடிய சமூக சக்தியாக உள்ளனர்.

வரலாறு நெடுகிலும் நாம் எதிர்கொண்ட மற்றும் வெற்றிகொண்ட சவால்கள் ஏராளம். அந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாட்டை வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்வதற்கு உழைக்கும் மக்கள் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளனர். கடந்த ஆண்டு மே தினத்தை கொண்டாடும் நேரத்தில், நாடு மிக மோசமான பொருளாதார வீழ்ச்சியில் இருந்ததால், அனைவரும் கடுமையான சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அந்த சவாலான காலங்களில் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கான கடினமான ஆரம்ப நடவடிக்கைகளுக்காக, பொறுமையுடனும் தைரியத்துடனும் காத்திருந்த அனைத்து உழைக்கும் மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முன்னெப்போதும் இல்லாத வகையில் இலங்கையின் உழைக்கும் மக்களின் பெருமையை உலகுக்குக் காட்டக் கூடிய ஒரு சந்தர்ப்பமாக இது இருப்பதோடு, இந்த இக்கட்டான நேரத்தில் குறுகிய அரசியல் நலன்களுக்கு இரையாகாமல் நாட்டை முதன்மைப்படுத்தி செயற்படுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாக்க நாங்கள் எப்போதும் செயற்பட்டு வருவதோடு, அவர்களின் உரிமைகள் மற்றும் சலுகைகளை வென்றெடுப்பதன் மூலம், உழைப்புக்கு சரியான மதிப்புக் கிடைக்கும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதே இன்றைய நாளின் எமது எதிர்பார்ப்பாகும். ஊழியர் சேமலாப நிதி தொடர்பில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த சில தரப்பினர் முயற்சித்தாலும் உழைக்கும் மக்களுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள ஊழியர் சேமலாப நிதியத்திற்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்த இடமளிக்கப்படமாட்டாது

என்பதையும் வலியுறுத்த விரும்புகின்றேன். 2048 ஆம் ஆண்டளவில் முன்னேற்றமடைந்த இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கான புதிய சீர்திருத்தப் பாதையில் ஒற்றுமையுடன் கைகோர்க்குமாறு அனைத்து உழைக்கும் மக்களையும் நான் அழைப்பதோடு, அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் அர்த்தமுள்ள சர்வதேச தொழிலாளர் தினத்திற்காக அவர்களை வாழ்த்துகிறேன். ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு