கம்பஹாவில் நாயை எரித்துக் கொன்றவர் கைது
கம்பஹா - இம்புல்கொடவில் வளர்ப்பு நாய்க்கு தீ வைத்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யக்கல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவமானது கடந்த 10 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.
இதன்போது கம்பஹா - இம்புல்கொட பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசாரணை
இம்புல்கொடவில் உள்ள வீடொன்றில் வளர்க்கப்பட்டிருந்த பெண் நாய் ஒன்றை கடந்த 10 ஆம் திகதி இரவு அயலவர் ஒருவர் தீ வைத்துள்ளார்.
பின்னர் பலத்த தீக்காயங்களுடன் நாயை அதன் உரிமையாளர் வைத்தியசாலையில் அனுமதிக்க முற்பட்ட போதும் அது உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சந்தேகநபர் ஜேர்மன் ஷெப்பர்ட் இன நாய்களை வீட்டில் வளர்க்கும் நபர் எனவும், அந்த நாய்களுடன் தீ வைக்கப்பட்ட பெண் நாய் உறவு வைத்து கொண்டதால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
கொல்லப்பட்ட நாயின் உரிமையாளர்கள் சம்பவம் தொடர்பில் யக்கல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.