நீர் வீழ்ச்சியில் குதித்த பெண்ணின் சடலம் மீட்பு

Sri Lanka
By Nafeel Apr 23, 2023 06:32 AM GMT
Nafeel

Nafeel

டெவோன் நீர் வீழ்ச்சியில் குதித்து தற்கொலை செய்துக் கொண்ட பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மகளின் கண் முன்னே நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவர் டெவோன் நீர் வீழ்ச்சியில் நேற்று குதித்து காணாமல் போயிருந்தார்.

இச்சம்பவம் நேற்று (22) காலை 11.30 மணியளவில் இடம்பெற்றிருந்தது. இவ்வாறு மாயமானவர் திம்புல்ல பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போகவத்தை பகுதியை சேர்ந்த ஏ.நிசாந்தனி வயது 34 நான்கு பிள்ளைகளின் தாய் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குடும்ப தகராறு காரணமாக முறைபாடு ஒன்றினை செய்வதற்காக தனது இரண்டு பிள்ளைகளுடன் பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்து ஒரு பிள்ளையை பொலிஸ் நிலையத்தில் நிறுத்தி விட்டு பெண் பிள்ளையுடன் நீர் வீழ்ச்சி பகுதிக்கு சென்று தனக்கு தாகம் எடுப்பதாக தெரிவித்து பெண் பிள்ளையிடம் குடிநீர் பெற்றுவருமாறு தெரிவித்து குடிநீர் எடுத்துவர செல்லும் போது தம்பியை பார்த்துக்கொள் என்று கூறி விட்டு கையை காட்டியவாறு நீர் வீழ்ச்சியில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக அவரது பிள்ளை பொலிஸ் நிலையத்தில் தெரிவித்துள்ளார்.

அதனை தொடர்ந்து குறித்த தாயினை தேடும் பணியினை இராணுவத்தினரும் பொலிஸாரும் பிரதேசவாசிகள் இணைந்து முன்னெடுத்த போது குறித்த பெண்ணின் சடலம் நீர் வீழ்ச்சியின் அடி வாரத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளது