கல்முனையில் பொதுமக்களுக்கு இடையூறாக கட்டாக்காலி மாடுகள்! அதிகாரிகள் எடுத்த அதிரடி நடவடிக்கை

Ampara Sri Lanka Government Of Sri Lanka Kalmunai
By Farook Sihan Jan 29, 2026 12:34 PM GMT
Farook Sihan

Farook Sihan

கல்முனை மாநகர பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாக காணப்பட்ட கட்டாக்காலி மாடுகள் மாநகர சபையினால் பிடிக்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், தண்டப்பணமும் அறவிடப்பட்டுள்ளது.

கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம்.றாபியின் பணிப்புரைக்கு அமைவாகவே குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டம் 

கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பொதுச் சந்தைகள் மற்றும் பிரதான வீதிகளில் கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டம் அதிகமாக இருந்தமையினால் கடந்த சில நாட்களாக அப்புறப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கல்முனையில் பொதுமக்களுக்கு இடையூறாக கட்டாக்காலி மாடுகள்! அதிகாரிகள் எடுத்த அதிரடி நடவடிக்கை | Stray Cows Causing Kalmunai Metropolitan Areas 

இதன்போது, கைப்பற்றப்பட்ட மாடுகளுக்கு தலா 5000 ரூபா வீதம் தண்டப் பணம் அறவிடப்பட்டு அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், பிடிபட்ட மாடுகள் மீண்டும் பொது இடங்களில் நடமாடுமாயின் அவை மீண்டும் கைப்பற்றப்படுவதுடன் அவற்றின் உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு அரசுடமையாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தண்டப்பணம் அறவிடும் நடவடிக்கை

கல்முனை மாநகர பிரதேசங்களில் பிரதான வீதிகள், பொதுச் சந்தைகள், விளையாட்டு மைதானங்கள், பூங்காக்கள் உள்ளிட்ட பொது இடங்களில் கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டம் பொது மக்களுக்கும் வர்த்தகர்களுக்கும் பெரும் தொல்லையாக இருப்பதுடன் வாகனப் போக்குவரத்துகளுக்கும் இடையூறாக இருக்கும் நிலையில், விபத்துகளுக்கும் முக்கிய காரணமாக அமைகின்றன.

கல்முனையில் பொதுமக்களுக்கு இடையூறாக கட்டாக்காலி மாடுகள்! அதிகாரிகள் எடுத்த அதிரடி நடவடிக்கை | Stray Cows Causing Kalmunai Metropolitan Areas

குறிப்பாக, மோட்டார் சைக்கிள்களில் பயணிப்போர் விபத்துக்குள்ளாகி காயமடைவதுடன் உயிராபத்தையும் எதிர்நோக்கி உள்ளனர்.

இதேவேளை, இரவு நேரங்களில் பெரும் எண்ணிக்கையிலான கட்டாக்காலி மாடுகள் கூட்டம் கூட்டமாக நகரை ஆக்கிரமித்து அசுத்தப்படுத்தி வருவதும் அதனால் துர்வாடை வீசுவதும் வர்த்தகர்கள் மற்றும் பொது மக்களுக்கு பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றைக் கருத்தில் கொண்டு கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்தும் பொருட்டு அவற்றைக் கைப்பற்றி உரிமையாளர்களிடம் ஒப்படைத்துள்ளதுடன், அவர்களிடம் இருந்து தண்டப்பணம் அறவிடும் நடவடிக்கையை கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம்.றாபி முன்னெடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.       

GalleryGalleryGalleryGalleryGallery