சுகாதாரத் துறையை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்: நலிந்த ஜயதிஸ்ஸ
அடுத்த மூன்று வருடங்களில் 5 முக்கிய பிரிவுகளின் கீழ் இந்தநாட்டின் சுகாதாரத் துறையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக வெகுசன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.
ஆயுர்வேத மருத்துவ சபைக்கான உறுப்பினர்களை நியமிப்பதற்கான நியமனக் கடிதங்களில் கையொப்பமிடும் போது அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,எதிர்வரும் காலங்களில் இந்தநாட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார சேவையை வலுப்படுத்துதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை சுகாதார சேவை அமைப்பை வலுப்படுத்துதல், தேசிய மருந்துகளை உற்பத்திகளை ஊக்குவித்து தொடர்ந்தும் உயர்தரமான மருந்துகளை மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களுக்கு வழங்கவும் நாட்டு மக்களின் போசாக்கு மட்டத்தை உயர்த்துதல், சுகாதார சுற்றுலா வர்த்தகத்தை அபிவிருத்தி செய்தல் ஆகிய முக்கிய 5 பிரிவுகளின் கீழ் சுகாதார சேவையை சிறந்த நிலைக்கு உயர்த்துவதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
இலவச சுகாதார சேவை
இந்நாட்டில் வாழும் மக்களுக்கு தரமான, உகந்த மற்றும் முறையான இலவச சுகாதார சேவையை தொடர்ந்து வழங்குவதற்காக அடுத்த மூன்று வருடங்களில் மேற்படி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
தேசிய மருத்துவ முறையை மேம்படுத்தி அதன் தனித்தன்மை கண்டறிந்து சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதுடன், சுற்றுலா கைத்தொழிலுடன் தேசிய மருத்துவத்தின் தனித்துவத்தை ஒன்றிணைத்து சுற்றுலாத் துறையை அபிவிருத்தியடையச் செய்வது அரசாங்கத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.
மருத்துவ முறை
சுற்றுலாப் பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ள மேற்கத்திய மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலையின் மனித மற்றும் பௌதீக வளங்களையும் அபிவிருத்தி செய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
தற்போது இலங்கையில் மேற்கத்தேய மருத்துவ முறையில் 1164 அரச வைத்தியசாலைகளும், 112 ஆயுர்வேத வைத்தியசாலைகளும் இலவச சுகாதார சேவையின் கீழ் இயங்கி வருகின்றன.குறித்த வைத்தியசாலைகள் ஒவ்வொன்றின் மீதும் கவனம் செலுத்தி அவற்றை அபிவிருத்தியடையச் செய்வதே தற்போதைய அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும் என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |