தேரருக்கு ஆதரவாக கூடியிருந்த 20 சட்டத்தரணிகள் - நிர்கதியாய் நின்ற சிறுமி!
சிறுமி ஒருவரை தவறான நடத்தைக்கு உட்படுத்திய அநுராதபுர பிரதான விகாரையின் தலைமை விகாராதிபதிக்கு எதிரான வழக்கு நேற்று (15) அநுராதபுரம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
குறித்த பௌத்த பிக்கு நீதிமன்றில் முன்னிலையாகாத நிலையிலேயே வழக்கு விசாரணைகள் நடைபெற்றன. சந்தேகநபரான பல்லேகம ஹேமரத்தன பிக்கு சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி கலிங்க இந்ததிஸ்ஸ, சிரேஷ்ட சட்டத்தரணி ரஞ்சித் ராஜகருணா உள்ளிட்ட 20 சட்டத்தரணிகள் முன்னிலையாகியிருந்தனர்.

அதேநேரம், பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் சார்பில் சட்டத்தரணி பிரதீப் திஸாநாயக்க முன்னிலையானார்.
இருப்பினும் தகாத நடத்தைக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் சிறுமியின் உரிமைகளுக்காக எந்த வழக்கறிஞரும் அல்லது வேறு எந்த வெளித் தரப்பினரும் முன்னிலையாகவில்லை.
நீதி மறுக்கப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி நீதிமன்றத்தில் நிர்க்கதியாய் நின்ற சம்பவம் பொதுமக்களிடையே பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது
சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் நீதியை நிலைநாட்டும் பிரிவின் நீதித்துறை பிரதானியாக கடமையாற்றும் சஞ்ஜீவனி அபேகோனின் முயற்சியினாலே தேரருக்கு நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
அநுராதபுரம் நீதிமன்ற நீதிபதி சியபத் சசிந்து விக்ரமரத்ன பல்லேகம ஹேமரத்ன தேரேரை 22ஆம் திகதியன்று அநுராதபுரம் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டார்.
இவ்விவகாரத்தில் முதல் நபரான பல்லேகம ஹேமரத்ன தேரர் கோட்டை நீதிபதி பாசன் அமரசேன பிறப்பித்த உத்தரவின்படி இம்மாதம் 22ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.