தமிழக முதலமைச்சருக்கு இலங்கை ஜனாதிபதி வாழ்த்து
புதிய தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள சி. ஜோசப் விஜய்க்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், தவெக தனி பெரும் கட்சியாக 108 இடங்களை வென்றிருந்தும் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை இல்லாமல் இருந்தது.

இதன் காரணமாக திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவை தவெக கோரியது. இதனையடுத்து திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி காங்கிரஸ் முதல் கட்சியாக தவெகவுடன் கூட்டணி வைத்தது.
அதேசமயம், திமுக கூட்டணியில் இருக்கும் சிபிஐ, சிபிஎம், விசிக மற்றும் ஐ.யூ.எம்.எல். ஆகியவை வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்துள்ளன.இதன் மூலம், தவெகவுக்கு பெரும்பான்மை கிடைத்தது.
இதனையடுத்து இன்று காலை நேரு உள்விளையாட்டு அரங்கில், தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தவெக தலைவர் விஜய்யை முதலமைச்சராக பதவி பிரமாணம் செய்துவைத்தார்.

இந்நிலையில், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தமிழக முதலமைச்சருக்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அவர் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிடுகையில், இலங்கையும் தமிழ்நாடும் வரலாறு, கலாசாரம், வணிகம் மற்றும் தலைமுறை தலைமுறையாகத் தொடரும் மக்களுக்கிடையிலான நெருக்கமான உறவுகளால் பிணைக்கப்பட்டுள்ளன.
இலங்கையும் இந்தியாவும் மென்மேலும் நெருக்கமான உறவுகளையும் வலுவான கூட்டாண்மையையும் தொடர்ந்து கட்டியெழுப்பி வரும் நிலையில், நமது எதிர்காலம் மகத்தான பொருளாதார வளர்ச்சியையும் வாய்ப்புகளையும் கொண்டுள்ளது.
வலுவான இந்திய - இலங்கை கூட்டாண்மைக்குள் இணைந்து செயல்படுவதன் மூலம், மேலான செழிப்பையும் முன்னேற்றத்தையும் அடைவதற்கு தாம் ஆவலுடன் காத்திருக்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.