விளையாட்டு துறை அமைச்சினால் கிழக்கில் இளைஞர்களுக்கான விருதுப் போட்டிகள்
கிழக்கு மாகாண இளைஞர்களுக்கிடையிலான விருதுப் போட்டிகள் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலை நடராஜானந்தா மண்டபத்தில் நேற்று (04) தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவி பணிப்பாளர் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வானது இளைஞர் விவகார விளையாட்டுத்துறை மற்றும் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சின் அனுசரணையுடன் நடைபெற்றுள்ளது.
போட்டி நிகழ்ச்சிகள்
குறி்த்த போட்டி நிகழ்ச்சியில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர் கழகங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 193 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
நடனம், நாட்டியம், அறிவிப்பாளர், நாடகம், பேச்சு, வில்லுப்பாட்டு, பாடல் உட்பட 33 நிகழ்ச்சிகளில் இளைஞர் யுவதிகள் இருபாலாரும் பங்கெடுத்துள்ளனர்.
போட்டிகளின் நடுவர்களாக சிரேஷ்ட ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் என துறை சார்ந்தவர்கள் கலந்து கொண்டுள்ளதுடன் நிகழ்வில் பிரதம அதிதியாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பிரதிப் பணிப்பாளர் ஜெகத் லியனகே கலந்து சிறப்பித்துள்ளார்.
மேலும் குறிப்பிட்ட மாவட்டங்களிலுள்ள கழகங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள்,தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மாவட்ட உதவி பணிப்பாளர்கள், இளைஞர் சேவைகள் அதிகாரிகள் என பெரும்பாலானோர் இணைந்துள்ளனர்.
இளைஞர் விருது விழா
இப்போட்டியானது இளைஞர், யுவதிகளின் ஆற்றலையும், ஆளுமைகளையும் வெளிப்படுத்தி மாகாண மட்டத்தில் முதலாம், இரண்டாம் இடங்களை வெற்றி பெற்றவர்கள், தேசிய மட்டத்தில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொண்டு தமது ஆற்றல்களை வெளிப்படுத்தி பணப்பரிசில்களையும், இளைஞர் விருதுகளையும் பெற்றுக்கொள்ள முடியும்.
இது ஜனாதிபதியின் தலைமையில் மஹரகம தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைமையகத்தில் நடைபெறும் இளைஞர் விருது விழாவில் பெற்றுக்கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |