மட்டக்களப்பில் கட்சி ஆதரவாளர்களுக்கிடையில் ஏற்பட்ட சண்டை : மூன்று பேர் காயம்
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர், ஆதரவாளர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (04) இரவு மட்டக்களப்பு - ஜெயந்திபுரம் பகுதியில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனின் கட்சி வேட்பாளர் மற்றும் ஆதரவாளர்கள் மீதே குறித்த தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் தாக்குதலுக்குட்பட்ட ஆதரவாளர்களில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
தேசிய ஜனநாயக முன்னணியின் கட்சியின் வேட்பாளர் காரியாலயத்தின் முன்பாக நின்றிருந்த கட்சியின் வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கும், அங்கு வந்த வேறு கட்சியைச் சேர்ந்த ஆதரவாளர்களுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
இதன் போது ஏற்பட்ட சண்டையின் காரணமாகவே ஆதரவாளர்கள் மூவர் காயமடைந்துள்ளனர் என விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
மேலும் காயமடைந்தவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |