அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டோருக்கு விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு வழங்கும் திட்டம் மேற்கொள்ளப்படுவதாக யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அனர்த்தங்கள் ஏற்பட்டால் பொதுமக்கள் 24 மணி நேரமும் 117 அல்லது 0773957894 , 0212221676 மற்றும் 0212117117 என்ற தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு பாதுகாப்பினை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பாக மேலும் தெரிவித்ததாவது, பாதுகாப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு சமைத்த உணவுகளை வழங்குமாறு பிரதேச செயலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மக்களுக்காக மாற்றுத் தங்குமிடம்
அத்துடன் நண்பர்கள் மற்றும் உறவினர்களது வீடுகளில் தங்கி இருக்கின்ற சந்தர்ப்பத்தில் அவர்கள் தங்களால் சமையலை செய்ய முடியாது என்று பிரதேச செயலர்கள் ஊடாக உறுதிப்படுத்துகின்ற பட்சத்தில் அவர்களுக்கும் உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்படும்.
மேலும், தற்போது பெய்துவரும் அடைமழை காரணமாக பாதிக்கப்படுகின்ற மக்களை, உயர்தர பரீட்சை நடக்கின்ற பாடசாலைகளை தவிர ஏனைய பாடசாலைகளில் தங்க வைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தொடர்ந்தும் பல தொண்டு நிறுவனங்களும் தனி நபர்களும் எங்களைத் தொடர்பு கொண்டு உதவி செய்வதற்கு முன் வந்திருக்கின்றார்கள்.
அந்த வகையில் அந்தந்த பிரதேச செயலகங்களில் ஒருமுறை ஏற்படுத்தப்பட்டு அங்கு ஒரு பொறுப்பான பதவி நிலை உத்தியோகத்தரின் தலைமையிலே, வழங்கப்படுகின்ற உணவுப்பொருட்களை அல்லது வேறு பொருட்களை சேமித்து வைத்து தேவையின் அடிப்படையில் பொதுமக்களுக்கு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.
அத்துடன் மேற்படி பொருட்களை மாவட்ட செயலகத்தில் அமைக்கப்பட்டிருக்கின்ற கரும பீடத்திலும் வழங்க முடியும். இவ்வாறு வழங்கப்படுகின்ற பொருட்கள் பிரதேச செயலகங்களுக்கு முன்னுரிமையின் அடிப்படையில் வழங்கப்படும்.
பின்னர் அது தேவை என் அடிப்படையில் மக்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும்.
பாதுகாப்பு நிலையங்களுக்கு நாட வேண்டிய மக்கள்
ஆகவே மக்களுக்கு பாதுகாப்பு நிலையங்களுக்கு செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டால் தயக்கம் இன்றி அங்கு செல்ல முடியும்.
உங்களுக்கு தேவையான வசதிகளை வழங்குவதற்கு பிரதேச செயலகங்களில் உள்ள உத்தியோகத்தர்கள் தயாராக உள்ளார்கள்.
இதற்கிடையில் யாழ்ப்பாண மாநகர சபை, பிரதேச சபை, வடிகால் அமைப்பு சபை ஆகியோர் வெள்ளநீரை வெளியேற்றுவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
மேலும் எதிர்வரும் காலங்களில் தொற்று நோய் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் அதிகரித்து காணப்படுகின்றது.
ஆகையால் நாங்கள் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருடன் தொடர்பு கொண்டு, மக்களுடைய சுகாதாரம் சார்ந்த பாதுகாப்பு பொறிமுறையையும் சரியான முறையில் முன்னெடுக்க வேண்டிய தேவைப்பாடு எழுந்துள்ளது.
அதிகரித்துள்ள கடல் மட்டம்
தற்போதைய தரவுகளின் அடிப்படையில் கடல் மட்டம் சற்று உயர்வடைந்து இருக்கின்ற காரணத்தினால் நிலப்பரப்பிலிருந்து கடலை நோக்கி செல்கின்ற வெள்ளத்தின் அளவு குறைவடைத்து இருக்கின்றது.
எனவே பொதுமக்கள் உங்களது பாதுகாப்பினை நீங்கள் உறுதிப்படுத்த வேண்டும்.
இதுவரையான தரவுகளின் அடிப்படையில் 12970 குடும்பங்களைச் சேர்ந்த 43682 பேர் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று வீடுகள் முழுமையாக சேததமடைந்துள்ளன.
129 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன. 66 பாதுகாப்பு நிலையங்களில் 1634 குடும்பங்களைச் சேர்ந்த 5793பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என திபர் மருதலிங்கம் பிரதீபன் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |