கணேமுல்ல சஞ்சீவ மீதான துப்பாக்கிச்சூடு! சம்பவத்தில் ஏற்பட்டுள்ள திடீர் திருப்பம்
புதிய இணைப்பு
கணேமுல்ல சஞ்சீவவை சுட்டுக் கொல்ல, புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் வழக்கறிஞராக ஆண் ஒருவர் உட்பட வழக்கறிஞராக பெண் ஒருவரும் மாறுவேடமிட்டு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே காவல்துறை ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க இதனை தெரிவித்துள்ளார்.
வழக்கறிஞர் வேடமணிந்த நபர் நீதிமன்றத்திற்குள் வெறுங்கையுடன் நுழைந்து, பின்னர் சம்பந்தப்பட்ட பெண்ணிடமிருந்து துப்பாக்கியைப் வாங்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முதலாம் இணைப்பு
பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும் குற்றவியல் கும்பல் தலைவருமான சஞ்சீவ குமார சமரரத்ன, அல்லது "கணேமுல்ல சஞ்சீவ" இன்று (19) காலை புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பான புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
துப்பாக்கிச் சூட்டில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை, சந்தேக நபர் ஒரு துளையிடப்பட்ட புத்தகத்திற்குள் மறைத்து, துப்பாக்கியின் வடிவத்தில் பக்கங்கள் வெட்டப்பட்டு நீதிமன்ற வளாகத்திற்குள் எடுத்துவரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், துப்பாக்கிதாரி இதற்காக குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் புத்தகத்தை பயன்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் ஒரு வழக்கறிஞராக மாறுவேடமிட்டு நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைவதைக் காட்டும் சிசிரிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன.
இரண்டாம் இணைப்பு
இன்று (19) காலை புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் உள்ள 05 ஆம் இலக்க நீதவான் நீதிமன்றத்திற்குள் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபரை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும் குற்றவியல் கும்பல் தலைவருமான "கணேமுல்ல சஞ்சீவ" எனப்படும் சஞ்சீவ குமார சமரரத்ன கொல்லப்பட்டார். துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர், வழக்கறிஞர் போல் மாறுவேடமிட்டு நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இருப்பினும், துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து சந்தேக நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், சந்தேக நபரைக் கைது செய்வதற்கான விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
துப்பாக்கிச்சூடு இடம்பெற்ற போது நீதி மன்ற வளாகத்தினுள் இருந்த பொதுமக்கள் அனைவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், தற்போது அனைவரும் இராணுவத்தினரால் சோதனைக்குட்படுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டுக்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
போதைப்பொருள் கடத்தல்காரர் துப்பாக்கிச்சூடு
புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் சற்று நேரத்திற்கு முன்பு துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
சம்பவத்தின் போது சுட்டுக் கொல்லப்பட்ட பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியுமான “கணேமுல்ல சஞ்சீவா” சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸ் உறுதிப்படுத்தியுள்ளது.
கனேமுல்ல சஞ்சீவ இன்று (19) காலை பூசா சிறைச்சாலையில் இருந்து புதுக்கடை நீதிமன்றத்திற்கு வழக்கு ஒன்றிற்காக அழைத்து வரப்பட்டார்.
சட்டத்தரணி போல் வேடமணிந்த நபரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
















