செம்மணி மனித புதைகுழி விவகாரம்! பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு
செம்மணி - சித்துப்பாத்தி பகுதியில் இதுவரை மீட்கப்பட்ட சான்று பொருட்களை மக்கள் பார்வைக்கு வைத்து அதனை அடையாளம் காண்பிப்பதற்காக நீதிமன்றத்தால் பொதுமக்களுக்கு வழி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சட்டத்தரணி நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம்(1) செம்மணி புதைகுழி குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், புலனாய்வு பிரிவினரால் நகர்த்தல் பத்திரம் ஒன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இதுவரை காலமும் அகழ்ந்து எடுக்கப்பட்ட எலும்புக்கூடு தொகுதிகளோடு மீட்கப்பட்ட பிற பொருட்களான ஆடைகள், அணிகலன்கள், பாதணிகள் போன்றவற்றை பொதுமக்கள் காட்சிக்கு வைப்பதற்காக நீதிமன்றம் திகதி ஒன்றினை தீர்மானித்திருக்கின்றது.
மேலதிக நடைமுறை
வருகின்ற செவ்வாய்க்கிழமை(5) பி.ப 1.30 மணியில் இருந்து 5.00 மணிவரை இந்தப் பொருட்களை பொதுமக்கள் பார்வையிட்டு, காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் தொடர்பான தகவல்களை மன்றிற்கோ, குற்றப்புலனாய்வு பிரிவினருக்கோ தெரிவிப்பதற்கான கட்டளை ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் அக்கறையுடைய காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள், காட்சிப்படுத்தப்பட உள்ள பொருட்களை பார்த்து அதனை அடையாளம் காட்ட முடியும்.
இது தொடர்பான மேலதிக நடைமுறை தொடர்பான விடயங்களை நாளையதினம் அறிவிக்க உள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.