சம்பூரில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பான நீதிமன்ற விசாரணை
திருகோணமலை - சம்பூரில் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணை முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது.
சம்பூரில் சிறுவர் பூங்காவை அண்மித்த கடற்கரையோர பகுதியில் கடந்த ஜூலை 20ஆம் திகதி MAG என்ற மிதிவெடி அகற்றும் நிறுவனம் தங்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது சிதைந்த மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டன.
இதையடுத்து, மிதிவெடி அகற்றும் பணி உடனடியாக நிறுத்தப்பட்டதுடன், பல முக்கிய அரச துறைகள் மற்றும் அதிகாரிகளின் நேரடி கள ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது.
மனித எச்சங்கள்
இது தொடர்பான சட்ட மாநாடு நேற்று (06) மூதூர் நீதிமன்றத்தில், நீதிபதி எச்.எம்.தஸ்னீம் பௌசான் தலைமையில் இடம்பெற்றது.
இதில் அரச பகுப்பாய்வு திணைக்களம், சட்ட வைத்திய அதிகாரி, தொல்லியல் திணைக்களம், காணாமல் போனோர் அலுவலகம், SOCO அலுவலகம், தேசிய கன்னிவெடி அகற்றல் சபை மற்றும் MAG நிறுவனத்தினரை உள்ளடக்கிய பல முக்கிய பிரிவுகளின் அதிகாரிகள் அழைக்கப்பட்டிருந்தனர்.
அழைக்கப்பட்ட அதிகாரிகளிடமிருந்து வழக்கு தொடர்பான ஆலோசனைகள் மாவட்ட நீதிபதியால் கேட்டறியப்பட்டதுடன், சம்பவம் இடம்பெற்ற காணி அரச காணியாகும் என்றும், அந்த இடம் மயானமாகப் பயன்படுத்தப்பட்டதற்கான எந்தவொரு ஆவண ஆதாரங்களும் இல்லை எனவும் பிரதேச செயலாளர் மற்றும் தொல்லியல் திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மனித எச்சங்களைப் பற்றி விரிவாக விசாரிக்கப்பட்டபோது, அவை மூன்று ஆண்களுக்குரிய எச்சங்கள் எனவும், அவர்களில் ஒருவர் 25–40 வயதிற்குட்பட்டவர், மற்றொருவர் 45–60 வயதிற்குட்பட்டவர் என்றும் மூன்றாவது எச்சம் 25 வயதிற்கு கீழான ஆணுக்குரியதென்றும் சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
மிதிவெடி அகழ்வு
மேலும், அவை இயற்கை மரணமா அல்லது குற்றம் தொடர்பானதா என்பதைத் துல்லியமாக கூற இயலாது என்றும் அவர் தெரிவித்தார்.
மிதிவெடி அகற்றும் அதிகாரிகள், மேலும் அகழ்வு மேற்கொள்வது அபாயகரமாக இருக்கக்கூடியதாகும் என்பதால், கிழக்கு மாகாண பாதுகாப்பு கட்டளைத் தளபதியின் அனுமதியுடன், பாதுகாப்புப் படையின் பொறியியல் பிரிவின் உத்தியோகத்தர்களின் ஊடாக மனித வலு கொண்டு அகழ்வு செய்ய வேண்டியுள்ளதாக ஆலோசனை வழங்கினர்.
இந்த அனைத்து நிலைப்பாடுகளின் அடிப்படையில், நீதிமன்றம் சம்பூரில் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் மீளவும் தோண்டுவதற்கான அனுமதியையும், அதற்கான உத்தியோகபூர்வ கட்டளையையும் வழங்கியுள்ளது.
மேலும், இந்த வழக்கு தொடர்பான அடுத்த கட்ட விசாரணைக்காக எதிர்வரும் ஆகஸ்ட் 26ஆம் திகதி வழக்கை மீள அழைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு மேலும் விரிவாக ஆய்வுக்குட்படுத்தப்பட உள்ள நிலையில், சம்பூர் பகுதியில் கடந்த காலத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் தொடர்பாக உண்மைகள் வெளிவரக்கூடிய ஒரு முக்கியமான கட்டத்தை இந்நிலை குறிக்கிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |