நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்தார் சம்பத் மனம்பேரி !

By Dharu Sep 17, 2025 08:54 AM GMT
Dharu

Dharu

"ஐஸ்" போதைப்பொருள் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் மூலப்பொருட்களை உள்ளடக்கிய இரண்டு கொள்கலன்களை மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில், சந்தேகத்தின் பேரில் தேடப்பட்டு வந்த சம்பத் மனம்பேரி இன்று வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

பாதாள உலகக் குழுத் தலைவர் கெஹல்பத்தர பத்மேவுக்குச் சொந்தமானது என குறித்த கொள்கலன்கள் அடையாளம் காணப்பட்டு, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த பின்னணியில் முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் சம்பத் மனம்பேரி தேடப்பட்டு வந்தார்.

இதன்படி மித்தெனியவில் இரண்டு கொள்கலன்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, மனம்பேரி சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, தனது கட்சிக்காரர் சம்பந்தப்பட்ட நீதவான் நீதிமன்றத்தில் சரணடையத் தயாராக இருப்பதாகவும், அவற்றில் படிக மெத்தம்பேட்டமைன் (ஐஸ்) தயாரிப்பில் பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படுவதாகவும் செப்டம்பர் 15 அன்று(நேற்று) மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்குத் தெரிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து, மனம்பேரி சரணடைந்த பிறகு அவரது பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு (ஐ.ஜி.பி) மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி விசாரணை அதிகாரிகளும் இந்த உத்தரவுக்கு இணங்க அறிவுறுத்தப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மனம்பேரியை கைது செய்யத் தேடப்படுபவர் என்பதை முன்னிலைப்படுத்தி, அவரது சட்டக் குழு தாக்கல் செய்த ரிட் மனுவை பரிசீலித்த பின்னர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.