சம்மாந்துறை பிரதேச சபையின் முதல் கூட்ட அமர்வு
சம்மாந்துறை (Sammanthurai) பிரதேச சபையின் ஐந்தாவது சபையின் முதலாவது கூட்ட அமர்வு நடவடிக்கைகள் இன்று(15) ஆரம்பிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் ஆரம்பத்தில் தேசியக் கீதம் இயற்றப்பட்டு சபையின் தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹீர் ஆரம்பித்து வைத்தார்.
பின்னர் சம்மாந்துறை பிரதேச சபையின் முதலாவது சபை அமர்வு நடவடிக்கைகள் சபையின் தவிசாளர் தலைமையில் பிரதேச சபையின் சபா மண்டபத்தில் உப தவிசாளர் வெள்ளையன் வினோகாந் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் பங்குபற்றலுடன் ஆரம்பமாகின.
சம்மாந்துரை பிரதேச சபை
இதன்போது, மத அனுஸ்டானம் இடம்பெற்ற பின்னர் தவிசாளர் உரையுடன் உப தவிசாளர் மற்றும் உறுப்பினர்களின் அறிமுகம் மற்றும் உரை என்பன தொடர்ச்சியாக இடம்பெற்றன.
அத்துடன் பின்வரும் தீர்மானங்களுக்காக சபைக்கு சமர்ப்பிக்கப்பட்ட விடயங்கள் மற்றும் மனுக்கள் தவிசாளர் தலைமையில் ஆராயப்பட்டன.
இதன்படி 1987/15 இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் பிரிவு 12 இற்கமைய ஆலோசனை குழுக்களை நியமித்தல்,நிதி மற்றும் கொள்கை உருவாக்கம்,வீடமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி,தொழில்நுட்ப சேவைகள் தொடர்பான குழு,சுற்றாடலும் வாழ்வசதிகளும்,1987/15 இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் 216ஆம் பிரிவிற்கமைய பெறுகைகளையும், அங்கீகாரங்களையும் செய்வதற்கும் கொடுப்பதற்கு அல்லது பெறுவதற்கு இரு அலுவலர்களுக்கு அங்கீகாரம் வழங்கல், காசோலையில் கையொப்பமிடுவதற்கு 02 உத்தியோகத்தர்களுக்கு அனுமதி வழங்கல், மாதாந்த செலவு தொடர்பாக கௌரவ தவிசாளர் அவர்கள் நேரடியாக அனுமதி வழங்கும் உச்ச நிலை தொடர்பான தீர்மானம் குறித்தும் கலந்துரையாடப்பட்டன.
மேலும் சபையில் பெறுகை நடைமுறை குழுக்களை தாபித்தல்(கொள்முதல் குழு),விலைமனு மதிப்பீட்டுக் குழு (Bid Evaluation Committee), (ஏற்றுக்கொள்ளும் குழு), அத்தியவசிய சேவையில் ஈடுபடும் Tractor, JCB, Motor Grader ஆகிய வாகனங்களுக்கான டயர் கொள்வனவுக்கான அனுமதி,அத்தியவசிய சேவையான தெரு விளக்கு பழுதுபார்த்தலுக்காக மின்விளக்குகள், மின் உபகரணங்கள், ஏனைய பொருட்கள் கொள்வனவு செய்வதற்கான தீர்மானம் தொடர்பாகவும் ஆராயப்பட்டன.
முக்கிய கலந்துரையாடல்
இறுதியாக பிரதேச சபையில் கடமையாற்றும் நிரந்தர, தற்காலிக ஊழியர்களுக்கான 2025.07.01- 2025.12.31 ஆம்திகதி வரையான சம்பளங்கள், மேலதிக நேர கொடுப்பனவு, பிரயாண கொடுப்பனவு மற்றும் ஏனைய கொடுப்பனவுகள் வழங்குவதற்கான தீர்மானம், சபைக்கு கிடைக்கப்பெற்ற கடிதங்கள், மனுக்கள், ஏனைய விடயங்கள் ஆராய்தல் குறித்தும் இக்கூட்ட அமர்வில் கலந்துரையாடப்பட்டதுடன் தீர்மானங்களும் பெறப்பட்டு சபை நடவடிக்கை சிறப்பாக நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதே வேளை சம்மாந்துறை அல் முனீர் மகா வித்தியாலய மாணவத் தலைவர்கள் சபையின் நடவடிக்கைகளை பார்வையிடுவதற்காக வருகை தந்திருந்ததுடன் சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் பிரதித் தவிசாளராக இருந்து அண்மையில் ஹஜ் கடமைக்காக சென்று அங்கு மரணம் அடைந்த அச்சு முகமது அவருக்கான மௌன பிரார்த்தனையும் சபையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |













