வட பகுதியிலிருந்து எடுக்கப்படுகின்ற முடிவுகள் கிழக்கில் சாத்தியமில்லை - சந்திர காந்தன்

Batticaloa Sri Lanka
By Nafeel May 02, 2023 03:08 PM GMT
Nafeel

Nafeel

வட பகுதியிலிருந்து எடுக்கப்படுகின்ற முடிவுகள் கிழக்கு மாகாணத்தில் சாத்தியமில்லை என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான, சி.சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு களுதாவளை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது, கிழக்கு மாகாணத்தின் அரசியல் பிரச்சினை என்பது வேறு. கிழக்கிலுள்ள சனத்தொகை பரம்பல் அதிலே உள்ள தமிழ் மக்களின் பிரச்சினை, 75வருடகால வரலாற்றிலே யாழ்ப்பாண தலைவர்கள் எடுத்த முடிவின் தோல்வி காரணமாக பலவீனப்பட்டிருக்கின்றது.

எமது சமூகம் அந்தப் பலவீனததையும் கட்டியெழுப்பிக் கொண்டு, 75 ஆண்டுகால வரலாற்றிலே எங்களை முந்தி நிற்கின்ற கல்வித்துறையையும், பொருளாதாரத்தையும் மேம்படுத்த வேண்டிய மிகப் பெரிய சவாலுக்குள் நிற்கிறோம்.

அதற்குள்தான் தற்போது ஐரோப்பா, ஆசியா, உள்ளிட்ட உலக நாடுகளில் ஏற்பட்டிருக்கின்ற மாற்றங்கள், இடதுசாரிக் கொள்கையின்பால் வளர்ந்து நிற்கின்ற நாடுகளின் தாக்கம், இதனை எவ்வாறு பாதிக்கின்றது என்பதோடு, இதனைக் கையாண்டு இலங்கையைப் பாதுகாப்பதோடு, கிழக்கிலுள்ள எமது மக்களின் இருப்பு, கலை கலாசாரங்களையும் பாதுகாக்க வேண்டிய மிகப் பொரிய பொறுப்புமிக்க கட்டத்தில் நாங்கள் நிற்கினறோம்.

மீண்டும் மீண்டும் இனவாதப் பேச்சக்களைப் பேசுகின்ற கூட்டம் இன்னமும் இருக்கத்தான் செய்கிறது. பட்டிருப்புத் தொகுதியில் கடந்த காலங்களில் இருந்தவர்கள் பாலம் வேண்டாம்,

சிங்களவர்கள் வந்து விடுவார்கள், தமிழர்களை சிங்களம் கற்க வேண்டாம் என தெரிவித்தவர்கள், தற்போது அவர்களின் வாரிசுகள் வந்து அவர்கள் எதையெல்லாம் வேண்டாம் என்று சொன்னார்களோ அதற்கு தலைகீழாக மாறி அதனையெல்லம் பயன்படுத்தி எமது மக்களை பகடைக்காயாக பாவிக்கின்ற சூழல்தான் தற்போது மட்டக்களப்பு அரசியல் மாறியிருக்கின்றது.

இவ்வாறான சதிகளிலிருந்து எமது மக்களைக் காத்துக்கொள்வது எமது மண்ணுக்கான மாண்மீயத்தை எவ்வாறு தக்க வைத்துக் கொள்வது என்பது தொடர்பில் மிகக் கச்சிதமாகச் சிந்தித்து முன்னேற வேண்டிய காலகட்டத்தில் தான் நாங்கள் அரசியல் செய்து கொண்டிருக்கிறோம்.

எமது கட்சி அடைய முடியாத இலக்குகளுக்காகப் போராடாமல், மக்களை இரத்தம் சிந்த வைக்காமல், ஜனநாயக ரீதியாகப் போராடி கையிலே இருக்கின்ற மாகாண சபைக்கு அதிகாரங்களைப் பெற்றுக் கொடுக்கின்ற விடயங்களில் கவனம் செலுத்துமே தவிர இன்னும் மக்களை மடையர்களாக்குகின்ற செயற்பாடுகளுக்கு கட்சி ஆதரவு வழங்காது.

கிழக்கு மாகாணத்தின் அடுத்த கட்ட தலைவிதியைத் தீர்மானிக்கின்ற தலைவர்களை, உழைப்பாளர் வர்க்கத்திலிருந்து கண்டு பிடித்து அவர்களைத் தலைமையாக்கி விடுவதுதான் எமது கட்சியினுடைய பணியாகும்” - என்றார்.