ஓட்டமாவடியிலிருந்த ஐந்து கிராம சேவகர் பிரிவுகளும் மீள ஒப்படைக்கப்பட கோரிக்கை
மட்டக்களப்பு - கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவிலிருந்து தற்காலிகமாக கோறளைப்பற்று தெற்கு, கிரான் பிரதேச செயலகப்பிரிவுடன் இணைக்கப்பட்ட ஐந்து கிராம சேவகர் பிரிவுகளும் மீண்டும் ஓட்டமாவடி பிரதேச செயலகப்பிரிவுடன் இணைக்கப்பட வேண்டுமென கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபையின் உதவித்தவிசாள்ர் ஏ.எச்.நுபைல் ஜேபி கேட்டுக்கொண்டுள்ளார்.
கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச செயலாளர் ஏ.தாஹிர் அவர்களின் ஒருங்கிணைப்பில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத்தலைவருமான கந்தசாமி பிரபு தலைமையில் இடம்பெற்ற அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்ட கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
''குறித்த கிராம பிரிவுகளை மீளளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டால் எமது நிருவாக சேவைகளை அண்மித்த பகுதிகளில் பெற்றுக்கொள்ள வசதியாக இருக்கும்.
துர்ப்பாக்கிய நிலை
தற்போதைய நிலையில் நாம் பல மைல் தூரம் கடந்து போய் எமது நிர்வாகக்காரியங்களை மேற்கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய நிலையேற்பட்டுள்ளது.
கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச செயலகத்திற்கு ஏற்கனவே இருந்த 176 சதுர் கீமீ நிலப்பரப்பில் ஐந்து கிராம சேவகர் பிரிவுகள் இழக்கப்பட்டுள்ளமையினால் 31 சதுர கீமீ நிலப்பரப்பு மாத்திரமே எஞ்சியுள்ளன.
இந்த நிரப்பினுள்ள சுமார் 50,000 க்கும் அதிகமான மகக்ள் நெருக்கமாக பல்வேறு சூழலியல், சுகாதார பாதிப்புக்களை எதிர்கொண்டு வாழ்ந்து வருகின்றனர். அதே நேரம், 686 சதுர கீமீ நிலப்பரப்பினுள் இதே அளவில் குறைந்த மக்கள் தொகையினர் வாழ்கின்றனர்.
கோறளைப்பற்று தெற்கு 686 சதுர கீமீ நிலப்பரப்பைக் கொண்டுள்ள அதே வேளை, கோறளைப்பற்று மேற்கு 31 சதுர கீமீ நிலப்பரப்பைக்கொண்டுள்ளமை இப்பிரதேச மக்களுக்கு இழைக்கப்படும் அப்பட்டமான அநியாயமாகும்.
ஆகவே, இதிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு தற்காலிக இணைப்பாக இணைக்கப்பட்டுள்ள 5 கிராம சேவகர் பிரிவுகளும் மீள ஒப்படைக்கப்பட வேண்டும;" என கோரிக்கையை முன்வைதுள்ளார்.