ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்ட கிளிநொச்சி வைத்தியசாலையின் பெண் நோயியல் பிரிவை மீள திறக்க கோரிக்கை
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால்(Ranil Wickremesinghe) திறந்து வைக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை வளாகத்தில் காணப்படும் பெண் நோயியல் வைத்திய பிரிவு தொடர்ந்து மூடப்பட்ட நிலையில் மீள இயங்க வைப்பதற்கு மத்திய மற்றும் மாகாண சுகாதார அமைச்சுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை வளாகத்தில் நெதர்லாந்து அரசின் நிதி உதவியுடன் சுமார் 5,320 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டு கடந்த மே மாதம் 25ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் திறந்து வைக்கப்பட்ட பெண் நோயியல் வைத்திய நிலையமானது தொடர்ந்து மூடப்பட்ட நிலையில் காணப்படுகின்றது.
மூடப்பட்டுள்ள பெண் நோயியல் பிரிவு
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை வளாகத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் முன்மொழிவுக்கு அமைய நெதர்லாந்து அரசின் நிதியுதவியுடன் 5320 மில்லியன் ரூபாய் செலவில் நவீன வசதிகள் கொண்ட மருத்துவ உபகரணங்களுடன் கூடிய பெண்நோயியல் வைத்திய நிலையம் கடந்த மே மாதம் 25ஆம் திகதி இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு திறந்து வைக்கப்பட்ட வைத்தியசாலை கட்டிட தொகுதியானது போதிய ஆளணி வளம் இன்மையால் தொடர்ந்து மூடப்பட்ட நிலையில் காணப்படுகின்றது.
குறிப்பாக நவீன வசதி கொண்ட இரு சத்திர சிகிச்சை கூடங்கள் இயங்காத நிலையில் காணப்படுகிறன. அதாவது மயக்க மருந்து வைத்திய ஆளணி இன்மை காரணமாகவே இயக்க முடியாதிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று கதிரியக்க வைத்திய நிபுணர் இன்மையால் அவற்றின் செயற்பாடுகளும் இடம்பெறுவதில்லை என்பதுடன் இவ்வாறு வைத்திய சிகிச்சைப்பிரிவு திறந்து வைக்கப்பட்டுள்ள போதும் போதிய ஆளணி வளங்கள் நியமிக்கப்படவில்லை.
இதற்கான ஆளணி வளங்களை நியமிப்பதற்கோ அல்லது ஏற்கனவே வைத்தியசாலையில் இருக்கின்ற ஆளணி வளங்களைக் கொண்டோ அதனை இயங்க வைப்பதற்கு மத்திய மற்றும் மாகாண சுகாதார அமைச்சுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
குறித்த வைத்திய சிகிச்சைப்பிரிவு இவ்வாறு நீண்ட காலம் மூடப்படுமாக இருந்தால் ஏனைய வைத்தியசாலைகளில் இடம்பெறுவது போன்று இந்த வைத்திய சிகிச்சைப்பிரிவில் இருக்கின்ற வைத்திய உபகரணங்களை வேறு வைத்தியசாலைகளுக்கு மாற்றுவதற்கான முயற்சிகள் கூட எதிர்காலத்தில் எடுக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |