வங்கி கணக்குகள் மற்றும் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும்: நிதி நிறுவனங்களுக்கு அவசர அறிவிப்பு
160 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வரி நிலுவையை ஆறு மாதங்களுக்குள் செலுத்த வேண்டும் எனவும், தவறினால் வங்கிக் கணக்குகள் மற்றும் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு ஏறக்குறைய 1000 நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் செபாலிகா சந்திரசேகர தெரிவித்துள்ளார்.
கடந்த வருட இறுதிக்குள் அந்த நிறுவனங்கள் செலுத்த வேண்டிய வரித்தொகை தொடர்பிலேயே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான கால அவகாசம் வழங்கப்படமாட்டாது எனவும் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
கணக்குகள் மற்றும் சொத்துக்கள் பறிமுதல்
மேலும், சில நிறுவனங்கள் ஏற்கனவே இந்த அறிவித்தலுக்கு பதிலளித்து சொத்துக்களை கையகப்படுத்தி நிலுவைத் தொகையை வசூலிக்க சம்மதம் தெரிவித்துள்ளன.
இதன்படி வரி செலுத்தத் தவறியவர்களிடம் கலந்துரையாடுவதற்காக குறித்த நிறுவனங்கள் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாக ஆணையாளர் நாயகம் செபாலிகா சந்திரசேகர தெரிவித்துள்ளார்.
நிதியமைச்சின் அறிவுறுத்தலின் பேரில் உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகபட்ச அதிகாரத்தின் கீழ் நிலுவைத் தொகையை வசூலிக்கும் பணியை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மேற்கொண்டு வருவதாக ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
வரி நிலுவை
மேலும், வரி நிலுவையை வசூலிப்பதற்காக பிரதி ஆணையாளர் நாயகத்தின் கீழ் 11 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் சந்திரசேகர தெரிவித்துள்ளார்.
வரி ஏய்ப்பு செய்யும் நிறுவனங்களில் இலாபம் ஈட்டும் நிறுவனங்களும் இருப்பதாக உள்நாட்டு இறைவரி சேவை சங்கத்தின் செயலாளர் எச்.ஏ.எல். உதயசிறி தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |