வடக்கும் கிழக்கும் ஒன்று சேர்க்கப்பட வேண்டும்!
கிழக்கு மாகாணமும் வடக்கு மாகாணமும் தனித் தனியாக பிரிந்து இருப்பதால், நாம் எதனையும் சாதித்து விட முடியாது.
எனவே இரண்டு மாகாணங்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன்(Shanakiyan Rasamanickam) தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழரசு கட்சி சார்பாக மூதூர் பிரதேச சபையில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்களுக்கான நிரந்தரமான தீர்வு
இங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், ஆரம்பத்தில் ஆயுதமேந்தி போராடிய நாங்கள் வேறு வழியில்லாமல் ஜனநாயக ரீதியில் ஒரே இலங்கைக்குள் தற்போது எமது உரிமைக்காக போராடிக் கொண்டிருக்கின்றோம்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எமது கட்சியை தவிர்த்து ஏனைய கட்சிகளுக்கும் எமது மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். தமிழ் மக்களுக்கான நிரந்தரமான தீர்வு கிடைக்க வேண்டும் என்று சிந்திக்கின்ற கட்சி எமது கட்சி மாத்திரமே.
தேசிய மக்கள் கட்சியில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அவர் இந்த பிரதேசத்திற்கு வந்திருப்பார்களா என்பது கூட சந்தேகம்.
திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த தேசிய மக்கள் சக்தி அமைச்சர், தமக்கு வாக்களித்த மக்களுடைய பிரச்சினைகளை பார்க்காமல் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வந்து அங்குள்ள வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.
பூர்வீக நிலங்களின் இழப்பு
பேரினவாத கட்சி வேட்பாளர்களினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரமே ஜனாதிபதியின் கட்சியை நாங்கள் தோற்கடித்தவர்கள். திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிக்காவிட்டிருந்தால், அவர்களால் இந்த மாவட்டத்தில் வெற்றி பெற்றிருக்க முடியாது.
தமிழர் தலைநகரமான திருகோணமலையில் சிங்கள பேரினவாத கட்சி வென்று இருக்கிறது என்றால் அது எங்களுக்கு அபாயகரமானதாகும். எங்களுடைய பூர்வீக நிலங்களை நாங்கள் இழக்க வேண்டி ஏற்படும்.
திருகோணமலை மாவட்டத்தில் சிங்கள மக்களுடைய எண்ணிக்கை 70வீதத்தால் அதிகரித்துள்ளது.
ஆனால் சிங்கள மக்கள் வாழ்கின்ற மாவட்டத்தில் அவர்களுடைய எண்ணிக்கை 20 வீதத்தால் மாத்திரமே அதிகரித்துள்ளது. இது திட்டமிட்ட குடியேற்றத்தை தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது அல்லவா! தமிழ் மக்களின் பிரச்சினைகளை நாங்கள்தான் பேச வேண்டும்.
அதற்கான தீர்வுகளை நாங்கள்தான் முன்வைக்க வேண்டும். பேரினவாத கட்சி வேட்பாளர்களினால் முன்வைக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
