ரணிலின் நிலையை கண்டு அச்சமடைந்துள்ளாரா கம்மன்பில

CID - Sri Lanka Police Anura Dissanayake Udaya Gammanpila
By Kanooshiya Sep 19, 2025 08:24 AM GMT
Kanooshiya

Kanooshiya

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நடந்தது போல் தனக்கும் நடக்கலாம் என பிவித்துறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு நாடு திரும்பிய பிவித்துறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில, கட்சியின் தலைமையகத்தில் இன்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

காவல்துறையினர் நீதிமன்றத்திற்கு அறிவித்ததன்படி தான் நாட்டுக்கு வரும் போது கைது செய்வதற்கான சாத்தியம் இல்லை என்றே கூறியுள்ளதாகவும் கம்மன்பில சுட்டிக்காட்டியுள்ளார்.

ICCPR சட்டத்தில் விசாரணை

இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், காவல்துறையிடம் வாக்குமூலம் ஒன்று வழங்க வேண்டியுள்ளது. அதன் பின்னரே நான் கைது செய்யப்படுவது தீர்மானிக்கப்படும்.ரணில் விக்கிரமசிங்கவுக்கு நடந்தது போலவும் இருக்கலாம்.

ஓகஸ்ட் மாதம் 18 ஆம் திகதி ஆராய்ச்சி ஒன்றை மேற்கொள்வதற்காக இரு நாடுகளுக்கு சென்றிருந்தேன். நான் சென்று ஒன்பது நாட்களின் பின்னரே ICCPR சட்டத்தில் எனக்கு எதிராக விசாரணை நடப்பதாக புலனாய்வு பிரிவு நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தது.

எந்த சக்தியாலும் நிறுத்த முடியாது

அரசாங்கத்தின் நாடகத்தை நான் நன்கு அறிவேன். சிறைக்கு செல்ல , மரணத்துக்கு , அவமதிப்புக்கு அஞ்சாத என்னை அரசாங்கம் அல்ல வேறு எந்த சக்தியாலும் நிறுத்த முடியாது. நான் மக்களின் பணத்தில் இயங்குபவன் அல்ல.

நான் நாடாளுமன்றத்திலும் இல்லை. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியில் ஒன்றுமே பேசாத பலர் இருக்கிறார்கள்.

நான் எனக்கான கடமையை தான் செய்கிறேன். கொலை மிரட்டல், அவமதிப்பு எனக்கு புதிதல்ல. இன்று கூட சமூக வலைத்தளங்களில் எனக்கு மூன்று கொலை மிரட்டல்கள் இருக்கின்றன.” என தெரிவித்துள்ளார்.