எதிர்கால திட்டங்கள் குறித்து விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ள ரணில்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாளை வியாழக்கிழமை விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2024 ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ரணில் விக்ரமசிங்க பகிரங்க உரையொன்றை நிகழ்த்தவுள்ள முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
நாட்டின் சமகால அரசியல் போக்கு மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து அவர் இதன்போது வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் புதிய ஜனநாயக முன்னணிக்கு ரணில் விக்ரமசிங்க தலைமை வகிக்கும் நிலையில், நாடாளுமன்ற அரசியலுக்கு அவர் விடைகொடுத்துள்ளார்.
ஐக்கிய தேசியக்கட்சிக்கு கிடைத்த தேசியப்பட்டியல் ஆசனம்
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவோ அல்லது நாடாளுமன்றத்திற்குள் நுழையவோமாட்டார் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன அறிவித்திருந்தார்.
அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆலோசகராக செயற்படுவார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய, ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைத்த ஒரே ஒரு தேசியப் பட்டியல் ஆசனம் வஜிர அபேவர்தனவுக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.