நாடாளுமன்றத்தை கலைக்க திட்டமிடும் ரணில்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது அதிகாரத்திற்கு அமைய நாடாளுமன்றத்தை கலைப்பார் என உயர் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் ஜனாதிபதிக்கும் இடையில் ஏற்பட்டுள்ள விரிசல் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வேட்புமனுக்கள்
ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு முன்னர் இரு கட்சிகளும் இணக்கப்பாட்டுக்கு வர முடியாத பட்சத்தில், நாடாளுமன்றத்தைக் கலைப்பது தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை தடையல்ல என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இரண்டு தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்துவது சாத்தியம். ஆனால் இரண்டு தேர்தல்களையும் ஒரே நாளில் நடத்துவது சாத்தியமில்லை என்று ஆணையம் கூறியுள்ளது.
பொதுஜன பெரமுன வேட்பாளர்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி, தனது சின்னத்தின் கீழ் ஒரு வேட்பாளரை முன்வைக்கும் என்று நேற்றைய பொது கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
அந்த கட்சியின் பொதுச்செயலாளர் சாலக காரியவசம் கட்சியின் பொது கூட்டத்தின் பின்னர் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்திருந்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்படுவார் என காரியவசம் மேலும் கூறியிருந்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தீர்மானம் தொடர்பில் இது வரையில், விக்ரமசிங்கவிலிருந்தோ அல்லது அவரது அலுவலகத்திலிருந்தோ உடனடி கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |