ஹிஜாப் அணிந்து பரீட்சை எழுதியோரின் பெறுபேறுகளை வெளியிடவும்: முஜிபுர் ரஹ்மான்
அதிபர் போட்டிப் பரீட்சையில் ஹிஜாப் அணிந்து பரீட்சை எழுதினார்கள் என தெரிவித்து மேல் மாகாணத்தில் 13 பரீட்சார்த்திகளின் பரீட்சை பெறுபேறுகள் இதுவரை வெளியிடப்படாமல் உள்ளன என குறிப்பிட்ட ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.யான முஜிபுர் ரஹ்மான், அவர்களின் பரீட்சை பெறுபேற்றை வெளியிட்டு அதிபர் வெற்றிடம் காணப்படும் பாடசாலைகளுக்கு அவர்களை நியமிக்க வேண்டும் வேண்டுகோள் விடுத்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (11) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தின்போதே இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
2023 ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற அதிபர் பரீட்சை பெறுபேறு கடந்த மே மாதம் வெளிவந்தது. அதன்போது மேல்மாகாணத்தைச் சேர்ந்த 13 பரீட்சார்த்திகளின் பரீட்சை பெறுபேறு இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அந்த 13 பரீட்சார்த்திகளும் ஹிஜாப் அணிந்து பரீட்சை எழுதியதாலே பரீட்சை பெறுபேறு இடைநிறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்த சபையில் இதற்கு முன்னரும் நான் கேட்டபோது, அவர்களின் பெறுபேறுகளை விரைவாக வெளியிட நடவடிக்கை எடுப்பதாக கல்வி அமைச்சர் தெரிவித்திருந்தார்.
நடத்தப்பட்ட விசாரணை
இதுதொடர்பான விசாரணை கடந்த டிசம்பர் மாதம் 23ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. அதன் பின்னர் கடந்த மாதம் இதுதொடர்பாக கல்வி அமைச்சர் என்றவகையில் உங்களை சந்தித்து கதைத்தபோது, இதுதொடர்பாக உடனடியாக தலையிட்டு பரீட்சை பெறுபேறுகளை விரைவாக வெளியிட நடவடிக்கை எடுக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு தெரிவித்திருந்தீர்கள்.
ஆனால் பரீட்சை திணைக்களம் இதுவரை 13 பரீட்சார்த்திகளினதும் பரீட்சை பெறுபேற்றை வெளியிடாமல் இருக்கிறது. இன்று மேல் மாகாணத்தில் அதிகமான பாடசாலைகளில் அதிபர்களுக்கான வெற்றிடம் உள்ளது.. குறிப்பாக கொழும்பு மாவட்டத்தில் பதில் அதிபர்களே பாடசாலைகளில் கடமையாற்றி வருகின்றனர்.
இந்த 13 பேரும் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். அதனால் இந்த விடயத்தில் தலையிட்டு, இந்த பிரச்சினையை விரைவாக தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதற்கு கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பதிலளிக்கையில், இதேபோன்றதொரு பிரச்சினை திருகோணமலை மாவட்டத்திலும் இடம்பெற்றது.
திருகோணமலை மாவட்ட மாணவர்களின் பரீட்சை பெறுபேற்றை கடந்த வாரம் வெளியிட்டோம், அதேபோன்று அடுத்தவாரத்துக்குள் இவர்களின் பரீட்சை பெறுபேற்றை வெளியிட்டு இந்த பிரச்சினை தீர்க்க்கப்படும். அதேவேளை இது அதிபர் சேவை பரீட்சை அல்ல. தடைதாண்டல் பரீட்சை என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |