பொலிஸ் விசாரணைகளில் பொதுமக்களது பாதுகாப்பு உறுதிப்படுத்த வேண்டும்
பொலிஸார் புலனாய்வு அலுவலர் என்ற வகையில் தங்களது புலனாய்வு மற்றும் விசாரணைகளின் போது பொலிஸார் பொதுமக்களை சித்திரவதைக்குள்ளாக்காமல் இருக்க வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கல்முனை பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ் தெரிவித்துள்ளார்.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சித்திரவதையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவளிக்கும் சர்வதேச தினத்தையொட்டி பொலிஸ் அதிகாரிகளுக்கான விழிப்புணர்வு செயலமர்வு கல்முனை பொலிஸ் நிலையத்தில் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ் தலைமையில் இடம்பெற்ற போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சித்திரவதைக் கலாசாரம்
மேலும் தெரிவிக்கையில், “மனித உரிமை மீறல் சம்பவம் என்பது ஆரம்பமும், முடிவும் உள்ள ஏதோவொரு நிகழ்வாகும்.
அது தனி நிகழ்வாக, தொடர் நிகழ்வாக. பலர் இணைந்து இடம்பெறும் கூட்டு நிகழ்வாக இருக்கலாம். இதனை பாதிக்கப்பட்டவர்கள் பொலிஸ் நிலையங்களுக்கு முறைப்பாடு செய்கின்ற போது துரிதமான நடவடிக்கை எடுக்கப்பட்டு மேலும் மீறல்கள் ஏற்படாத வகையில் பொலிஸார் செயற்படவேண்டியது அவர்களின் கடமையிலான பணியாகும்.
முறைப்பாடு செய்ய நிலையத்திற்கு வருபவர்களை அன்போடு ஆதரித்து வார்த்தைப் பிரயோகங்களை எவரது மனமும் புண்படாத வகையில் பாவிக்கவேண்டும்.
இது மனித கௌரவத்தை பாதுகாக்கும் என்பதால் சித்திரவதைக் கலாசாரம் இல்லாதொழிப்பதற்கு அனைவர்களும் முன்வந்து செயற்படவேண்டும்”என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிகழ்வின் போது கல்முனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையைச் சேர்ந்த எம்.ஏ.சி.எம். பசால், மனித உரிமைகள் அதிகாரி பி.எம்.எம். பெறோஸ் ஆகியோரும் விரிவுரையாற்றினர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |