கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட பேராற்றுவெளி முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்கள் (Photos)
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் வலயக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட கந்தளாய் பேராற்றுவெளி முஸ்லிம் மகா வித்தியாலயத்திலிருந்து இடமாற்றம் பெற்றுச் சென்ற அதிபரை மீண்டும் பெற்றுத் தருமாறு கோரி ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த போராட்டம் பாடசாலை முன்பாக இன்றைய தினம் (13.06.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதில் இருநூறுக்கும் மேற்பட்ட மாணவர்களும், பெற்றோர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
கந்தளாய் பேராற்றுவெளி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் அதிபராக நீண்ட காலமாக கடமையாற்றி இடமாற்றம் பெற்றுச் சென்ற அதிபரான எச்.எம்.நௌஸாத் என்பவரை மீண்டும் பாடசாலையின் அதிபராக பெற்றுத்தருமாறு கோரியே அப்பாடசாலை மாணவர்களும், பெற்றோர்களும் குறித்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.
“வலயக் கல்வி பணிப்பாளரே சுயாதீனமாக இயங்கு, கல்வியை சீரலிக்காதே, எமது அதிபரை பெற்று தா” போன்ற வசனங்கள் எழுதப்பட்ட பதாகைகளை மாணவர்கள் ஏந்தியவாறு ஆர்பாட்டத்தில் கலந்துக்கொண்டார்கள்.
இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களினால் கந்தளாய் வலயக் கல்வி அதிகாரிகளிடம் மனு ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






