உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்கவும்! கம்பன்பில கோரிக்கை

By Dharu Jun 15, 2026 10:37 AM GMT

2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர (G.C.E. A/L) பரீட்சையை ஒத்திவைக்க அரசாங்கம் மறுத்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில எச்சரித்துள்ளார்.

கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் மாணவர்களுக்குத் தயாராவதற்கு மிகக் குறைவான நேரமே வழங்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டு மேற்கண்ட விடயத்தை தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று(15.06.2026) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், 

உயர்தர பரீட்சை

“2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை ஓகஸ்ட் 10 ஆம் திகதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

முந்தைய தேர்வின் முடிவுகள் மார்ச் 31 ஆம் திகதியே வெளியிடப்பட்டதால், இரண்டாவது அல்லது மூன்றாவது முறையாக தேர்வெழுத திட்டமிடும் மாணவர்களுக்கு தயாராவதற்கு சுமார் 133 நாட்கள் உள்ளன

முந்தைய ஆண்டுகளில், தேர்வு முடிவுகள் வெளியான பிறகு தேர்வர்கள் தயாராவதற்கு 178 முதல் 198 நாட்கள் வரை அவகாசம் வழங்கப்பட்டது.

இவ்வாறு குறைக்கப்பட்ட தயாரிப்புக் காலம் நியாயமற்ற செயல் . சமீபத்திய ஆண்டுகளில் தேர்வர்களுக்கு 27 முதல் 32 மாதங்கள் வரை படிப்பு நேரம் கிடைத்த நிலையில், 2026-ஆம் ஆண்டு தேர்வெழுதும் மாணவர்களுக்கு சுமார் 21 மாதங்கள் மட்டுமே படிப்பு நேரம் கிடைக்கும் என்பதால், முதல் முறை தேர்வர்கள் பாதகமான நிலைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

அரசியலமைப்புச் சட்டம்

அரசியலமைப்புச் சட்டத்தின் சமத்துவக் கோட்பாடு மீறப்பட்டுள்ளதாகக் கூறி, பாதிக்கப்பட்ட மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனுக்களைத் தாக்கல் செய்யவோ அல்லது மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் மூலம் நிவாரணம் கோரவோ முகாந்திரம் இருக்கலாம். 

2022-ல் இதேபோன்ற ஒரு சர்ச்சை ஏற்பட்டது. பரீட்சைக்கு தயாராகும் நேரம் குறித்து கவலைகள் எழுப்பப்பட்டதைத் தொடர்ந்து, தேர்வு இறுதியில் ஒத்திவைக்கப்பட்டது.

2026-ஆம் ஆண்டு தேர்வு அட்டவணையை மறுபரிசீலனை செய்து, மாணவர்களுக்கு நியாயத்தை உறுதி செய்யுங்கள். என வலியுறுத்தியுள்ளார்.