ஆறாவது நாளாக தொடரும் போராட்டம்..!
தபால் ஊழியர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை (17) மாலை 4.00 மணியிலிருந்து ஆரம்பித்த வேலைநிறுத்தம் இன்று (23) தொடர்ந்து ஆறாவது நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
ஊழியர்கள் மொத்தம் 19 கோரிக்கைகளை முன்வைத்து இந்த தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.
அவற்றில் மேலதிக வேலை நேரத்துக்கான ஊதியம், கட்டாய கைரேகை வருகைப் பதிவு முறையின் எதிர்ப்பு, பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு தொடர்பான சிக்கல்கள் உள்ளிட்டவை அடங்குகின்றன.
தொடரும் போராட்டம்
இது குறித்து தொழிற்சங்கங்கள் தெரிவித்ததாவது, தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும் எனும் நிலைப்பாடு வகுக்கப்பட்டுள்ளதாகும்.
தபால் மாஅதிபர் ருவன் சத்குமார் ஊடகங்களுக்கு தெரிவித்ததாவது, முன்வைக்கப்பட்ட 19 கோரிக்கைகளில் 17 கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளன.
எனினும், மேலதிக வேலை நேர ஊதியம் மற்றும் கைரேகை வருகை கண்காணிப்பு தொடர்பான கோரிக்கைகள் அரசின் கொள்கைக்கு முரணானவை என்பதால் நிறைவேற்ற முடியாது என அவர் குறிப்பிட்டார்.
வேலைநிறுத்தம்
தொடர்ந்து வேலைநிறுத்தம் மேற்கொள்ளும் தொழிற்சங்க அணிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
வேலைநிறுத்தம் காரணமாக நாட்டின் மத்திய தபால் பரிமாற்ற நிலையங்களில் சுமார் 15 லட்சம் கடிதங்களும் பார்சல்களும் தேக்கமடைந்துள்ளன.
இதனால் பொதுமக்கள் தபால் சேவையில் கடுமையான அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
தொழிற்சங்க பிரதிநிதிகள், தபால் சேவையை சீராக நடத்துவதற்காக அரசாங்கம் உடனடியாக தீர்வு காண வேண்டிய அவசியம் இருப்பதாக வலியுறுத்தியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |