நாரம்மல பொலிஸாரின் துப்பாக்கிச் சூடு: 200 மில்லியன் நட்டஈடு கோரும் குடும்பஸ்தினர்
கடந்த சில நாட்களுக்கு நாரம்மல பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்த தச்சுப்பணியாளரின், மனைவி, நட்டஈடு கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உட்பட பொலிஸ் அதிகாரிகளிடமிருந்து 200 மில்லியன் ரூபாயை பெற்றுத்தரவேண்டும் என நேற்று(16.02.2024) அவர் தமது மனுவில் கோரியுள்ளார்.
உயிரிழந்த ரொசான் குமாரசிறி பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது சிவில் கடமையில் ஈடுபட்டிருந்த உப பொலிஸ் பரிசோதகர் குணவர்தன என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
குடும்ப நிலை
உயிரிழந்த ரொசான் குமாரசிறியை தான் 2007ஆம் திருமணம் செய்து கொண்டதாகவும், தங்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளதாகவும் மனுதாரரான கமனி ரூபாகா பிரியங்கனி தெரிவித்துள்ளார்.
இரண்டு மூத்த பெண்களும் தற்போது 16 வயதுடைய இரட்டையர்கள் என்றும் அவர்கள் கல்விப்பொதுத்தராதர பரீட்சை எழுதவிருக்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இளைய பிள்ளை எட்டு வயதுடைய மகன் எனவும், அவர் பாடசாலையில் தரம் 3 இல் கல்வி கற்று வருவதாகவும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
அதிகார துஸ்பிரயோகம்
இந்தநிலையில் சம்பவத்தின்போது, முதல் மற்றும் இரண்டாவது பிரதிவாதிகளான உப பொலிஸ் பொலிஸ் பரிசோதகர் குணவர்தன மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் சமுதித பண்டார குலசேகர ஆகியோர், தமது அதிகாரங்களை துஸ்பிரயோகம் செய்யும் வகையில் தன்னிச்சையாக செயற்பட்டதாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் நாரம்மல பொலிஸின் பொறுப்பதிகாரி, பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் அரசாங்கத்தரப்பினர் ஆகியோர் 'யுக்திய நடவடிக்கையின்' போது நடைமுறை வழிகாட்டுதல்களை மீறி முதல் மற்றும் இரண்டாவது பிரதிவாதிகள் கடமைகளில் ஈடுபட அனுமதித்துள்ளதாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.