"எருக்கலம்பிட்டி இப்றாஹிம் சேரின் மறைவு கவலை தருகிறது" - மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்!

Sri Lanka
By Nafeel May 05, 2023 10:08 AM GMT
Nafeel

Nafeel

மன்னார், எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரியின் ஓய்வுபெற்ற ஆசிரியர் அல்ஹாஜ் முஹம்மது இப்றாஹிம் சேர் இறையடி சேர்ந்த செய்தி கவலையளிப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

அன்னாரின் மறைவு குறித்து அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில், "எந்தச் சந்தர்ப்பத்திலும் எல்லோருடனும் இன்முகத்துடன் பழகும் வாஞ்சையுள்ள குணமுடையவர்.

புன்முறுவலும் ஒரு "சதகா" வே என்ற இஸ்லாத்தின் உயர் கோட்பாட்டுக்கு உயிரூட்டுவதாகவே அவரது செயற்பாடுகள் இருந்தன.

எனது அமைச்சில் என்னுடைய இணைப்புச் செயலாளராக பணியாற்றிய காலத்தில், மக்களுடன் பழகுவதையும் அவர்களை அனுசரிப்பதிலும் மிக நேர்த்தியாக நடந்துகொண்டவர். அதேபோன்று, மர்ஹூம் நூர்தீன் மசூர் அமைச்சராக இருந்தபொழுது, அவரது செயலாளராகவும் இருந்து நல்ல பணிகளை ஆற்றியவர். மேலும், அவர் ஒரு ஆசானாகவிருந்து கல்விச் சமூகத்திற்காக பெரும் பணியாற்றியவர். பல கல்விமான்கள், அரசியல்வாதிகள், ஆலிம்கள் உருவாகுவதற்கு வழி சமைத்தவர். மானிடத்தை நேசிப்பதில் மர்ஹும் இப்றாஹிம் சேரிடமிருந்த மாண்பியமே அவரை மறுமை வாழ்க்கையில் ஈடேற்றிவிடும். இந்த நம்பிக்கை என்னிடமுள்ளது.

இதற்காகவே நான் பிரார்த்திக்கிறேன். அவரவர் தவணை வரையிலும்தான் இவ்வுலகில் ஆத்மாக்கள் அனுமதிக்கப்பட்டிருக்கின்றன.

இன்றுடன் முடிந்துபோன இப்றாஹிம் சேரின் ஆத்மாவை எல்லாம் வல்ல இறைவன் பொருந்திக்கொள்ளட்டும். அன்னாரின் மறைவால் துயருறும் அவரது குடும்பத்தினருக்கு மன ஆறுதலை அளிக்க இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

மேலும், எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து, ஜன்னத்துல் பிர்தௌஸுல் அஃலா எனும் உயர்மிகு சுவனத்தை அன்னாருக்கு வழங்குவானாக..! ஆமீன்..!" என்று குறிப்பிட்டுள்ளார்.