முதல் தடவையாக பாகிஸ்தானை வீழ்த்தி டி20 தொடரை வென்றது ஆப்கானிஸ்தான்

Cricket Pakistan Afghanistan
By Fathima Mar 27, 2023 07:43 AM GMT
Fathima

Fathima

ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகின்றன.

இதன் முதல் டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றிபெற, இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி நேற்று ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடிப்பாட்டத்தை தெரிவு செய்தது.

அதன்படி களமிறங்கிய அந்த அணியில் சைம் அயூப், அப்துல்லா ஷஃபிக் ஆகியோர் ஃபஸல்ஹக் ஃபரூக்கியின் முதல் ஓவரிலியே விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக்கட்டினர்.

அதன்பின் முகமது ஹாரிஸ் 15 ஓட்டங்களையும், தயுப் தஹிர் 13 ஓட்டங்களிலும், அஸாம் கான் ஒரு ஓட்டத்திலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறி கொடுத்தனர்.

பின்னர் ஜோடி சேர்ந்த இமாத் வாசிம் - ஷதாப் கான் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர்.

இதில் நிதானமாக விளையாடிய இமாத் வாசிம் அரைசதம் கடந்ததுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 64 ஓட்டங்களையும், ஷதாப் கான் 32 ஓட்டங்களையும் குவித்தனர்.

இதன்மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 130 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர் உஸ்மான் கானி 7 ஓட்டங்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

பின்னர் ஜோடி சேர்ந்த ரஹ்மனுல்லா குர்பாஸ் - இப்ராஹிம் ஸத்ரான் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர்.

இதில் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கட்ட ரஹ்மனுல்லா குர்பாஸ் 44 ஓட்டங்களிலும், இப்ராஹிம் ஸத்ரான் 38 ஓட்டங்களிலும் விக்கெட்டுகளை இழந்தனர்.

அதன்பின் ஜோடி சேர்ந்த நஜிபுல்லா ஸத்ரான் - முகமது நபி இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

இதன்மூலம் ஆப்கானிஸ்தான் அணி 19.5 ஓவர்களில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் பாக்கிஸ்தானை வீழ்தியதுடன், 2-0 என்ற கணக்கில் டி20 தொடரை வென்றவது. இதன்மூலம் பாகிஸ்தானுக்கு எதிராக தங்களது முதல் டி20 தொடரை வென்று ஆப்கானிஸ்தான் அணி சாதனைப் படைத்தது.  

Gallery