கல்முனையில் இறைச்சிக் கடைகள் 3 நாட்களுக்கு மூட உத்தரவு

Vesak Full Moon Poya Sri Lanka Kalmunai
By Fathima May 04, 2023 08:09 AM GMT
Fathima

Fathima

வெசாக் வாரத்தை முன்னிட்டு கல்முனை மாநகர சபை எல்லையினுள் இயங்கி வரும் இறைச்சி கடைகள் கடைகள் யாவும் மூடப்பட வேண்டும் என மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி பணிப்புரை விடுத்துள்ளார்.

வெசாக் பண்டிகையை முன்னிட்டு பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் அறிவுறுத்தலுக்கமைவாக நாடு முழுவதும் இன்றைய தினம் (04.05.2023) முதல் எதிர்வாராம் 06ஆம் திகதி வரையான 03 நாட்களுக்கு மாடு, ஆடு மற்றும் கோழி என்பன அறுத்து, விற்பனை செய்வது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் 03 தினங்களும் கல்முனை மாநகர சபை எல்லையினுள் இயங்கி வருகின்ற மாட்டிறைச்சிக் கடைகள், ஆட்டிறைச்சிக் கடைகள் மற்றும் கோழியிறைச்சிக் கடைகள் யாவும் மூடப்பட வேண்டும் என மாநகர ஆணையாளர் பணிப்புரை விடுத்துள்ளார். 

கல்முனையில் இறைச்சிக் கடைகள் 3 நாட்களுக்கு மூட உத்தரவு | Order To Close Meat Shops In Kalmunai

கல்முனை மாநகர சபை

அத்துடன் கல்முனை மாநகர சபை எல்லையினுள் சேனைக்குடியிருப்பு நற்பிட்டிமுனை மணல்சேனை மருதமுனை பெரியநீலாவணை பாண்டிருப்பு சாய்ந்தமருது கல்முனை மாநகர பகுதிகளில் மாட்டிறைச்சிக் கடைகள் ஆட்டிறைச்சிக் கடைகள் மற்றும் கோழியிறைச்சிக் கடைகள் இயங்கி வருகின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

இதேவேளை, கல்முனை மாநகர சபை எல்லையினுள் மாட்டிறைச்சியைக் கட்டுப்பாட்டு விலையில் விற்பதற்கு சில இறைச்சிக்கடை உரிமையாளர்கள் உதாசீனமாகச் செயற்படுவதாகப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

அண்மையில் கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் இறைச்சிக் கடை உரிமையாளர்களுடன் நடாத்தப்பட்ட கலந்துரையாடலின்போது அவர்களது இணக்கப்பாட்டுடன் கட்டுப்பாட்டு விலை தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுச் செயற்படுத்தப்பட்டிருந்தது.

கல்முனையில் இறைச்சிக் கடைகள் 3 நாட்களுக்கு மூட உத்தரவு | Order To Close Meat Shops In Kalmunai

இறைச்சிக் கடைகள்

இதன்படி ஒரு கிலோ கிராம் தனி இறைச்சியை 2,000 ரூபாவுக்கும் 200 கிராம் முள் சேர்க்கப்பட்ட ஒரு கிலோ கிராம் இறைச்சியை 1800 ரூபாவுக்கும் விற்பனை செய்வதெனத் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

அத்துடன் இவ்விலைப்பட்டியலை அனைத்து இறைச்சிக் கடைகளிலும் காட்சிப்படுத்தும் பொருட்டு குறித்த விலைப்பட்டியல் ஆணையாளரினால் இறைச்சிக் கடைகளின் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டிருந்தன.

ஆனால், சில இறைச்சிக் கடை உரிமையாளர்கள் குறித்த கட்டுப்பாட்டு விலையை மீறி தான்தோன்றித்தனமாக விலை அதிகரிப்பை மேற்கொண்டுள்ளதாகக் குற்றச்சாட்டுப் பரவலாக முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகளை உங்களது கை தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள எம்முடன் இணையுங்கள் Join Now