இம்முறை வடக்கு மக்களின் வாக்குகள் இனவாதத்திற்கு எதிரானவை: விமல் வீரவன்ச சுட்டிக்காட்டு
நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் வடக்கில் இருந்து கிடைக்க பெற்ற வாக்குகள் இனவாதத்திற்கு எதிரானவை மாத்திரமல்ல பிரிவினைவாதத்திற்கும் எதிரானவை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச(Wimal Weerawansa) தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
பொதுத் தேர்தலின் பெறுபேறுகள்
அவர் மேலும் தெரிவிக்கையில், “கனேடிய தமிழ் காங்கிரஸ் போன்ற அமைப்புகள் இனவாதம், மதம் மற்றும் பிரிவினைவாத கோரிக்கைகளை முன்வைக்கின்றன.
வடக்கில் தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்த வாக்குகள் இனவாதத்திற்கும் பிரிவினைவாதத்திற்கும் எதிரானவை.
பிரிவினைவாத ஆதரவு தமிழ் தேசியகூட்டமைப்பு போன்றவற்றை தெரிவுசெய்வதற்கு பதில் தமிழ் மக்கள், ஜே.வி.பியை உள்ளடக்கிய தேசிய மக்கள் சக்தியை தெரிவுசெய்துள்ளனர். இதன் மூலம் பிரிவினைவாதம் இனவாதத்தை நிராகரித்துள்ளதை வெளிப்படுத்தியுள்ளனர்.
எனவே கனடா தமிழ் அமைப்புகளின் விருப்பத்திற்கு ஏற்ப செயற்படுவதற்கு பதில் ஐக்கிய இலங்கைக்குள் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களின் அபிலாசைகளை சமமாக நிறைவேற்றுவதே அரசாங்கத்தின் ஆணை” என அவர் தெரிவித்துள்ளார்.