முஸ்லிம்கள் இல்லாத அமைச்சரவை : பதில் வழங்கிய அநுர அரசாங்கம்
புதிய அமைச்சரவையானது, இனம், மதம் மற்றும் சாதி அடிப்படையில் அமைக்கப்படவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayathissa) தெரிவித்துள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று(26) நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலே அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் புதிய அமைச்சரவை நியமனங்களில் முஸ்லிம் பிரதிநிதிகள் இல்லாதது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் கொடுக்கும் வகையிலே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
முஸ்லிம் பிரதிநிதிகள்
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், அமைச்சு பொறுப்புக்களை கையாள்வதில் மிகவும் திறமையான நபர்களை தாங்கள் தேர்ந்தெடுத்தோம்.
இந்த நிலையில், மேல் மாகாண ஆளுநராக முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், பிரதி சபாநாயகர், பிரதி அமைச்சர் போன்ற பதவிகளில் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
இதேவேளை, முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தேசிய பட்டியல் மூலம் நியமிக்கப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஒன்றிணைந்த இலங்கை தேசம்
இதன்படி, இனங்கள், மதங்கள் மற்றும் சாதிகள் இன்றி ஒட்டுமொத்த இலங்கை தேசத்துக்கும் சேவை செய்வதிலேயே தாம் கவனம் செலுத்துவதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ வலியுறுத்தியுள்ளார்.
அத்தோடு, தற்போதைய நிலைமையை இனம் அல்லது மதத்தின் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டாம் என்று அவர் முஸ்லிம் சமூகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தொடர்ந்தும், “ஒன்றிணைந்த இலங்கை தேசம் என்ற தொலைநோக்கு பார்வையுடன் புதிய அரசாங்கத்தையும் அமைச்சரவையையும் நாங்கள் நிறுவியுள்ளோம்.
இந்த அணுகுமுறையானது பிரச்சினைகளை மிகவும் திறம்பட கையாள்வதற்கு எமக்கு இடமளிக்கும்" என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |